Also Watch
Read this
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாம்பரம் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கொல்லாபுரி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவின் நான்காவது வார விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆடி மாதத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பக்தர்களுக்காக பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி ஸ்ரீதேவி கொல்லாபுரி அம்மனை தரிசனம் செய்ய ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கணக்கான பெண்கள் பக்தி பரவசத்துடன் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீச்சட்டி ஏந்திய பெண்கள் அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டு கோவில் வளாகத்தைச் சுற்றி வலம் வந்து வழிபட்டனர்.
மேலும், இளைஞர்கள் மற்றும் வாலிபர்கள் பலர் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அலகு குத்தி வழிபாடு செய்தனர். சில பக்தர்கள் தங்களது முதுகில் அலகு குத்தி, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இழுத்தும், கனரக வாகனங்களில் முதுகில் அலகு குத்தி தொங்கியபடியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அம்மன் மீது கொண்ட பக்தியின் வெளிப்பாடாக நடைபெற்ற இந்த நேர்த்திக்கடன் நிகழ்வுகளை காண சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved