Also Watch
Read this
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலாவதாக பாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது அனைத்துக்கட்சி தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், தீர்மானம் எல்லாம் சரிதான், அது மட்டுமே போதுமா? சட்டப் பாதுகாப்பு வேண்டாமா? தீர்மானத்தை அப்படியே மத்திய அரசு சத்தியவாக்காக எடுத்துக் கொள்ளுமா? பல தீர்மானங்கள் தூர்ந்து போகவில்லையா? என கேள்விகளால் திமுகவினர் துளைத்துவரும் நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் அடுத்தகட்டமாக தமிழக அரசின் நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சட்டப்பேரவையில் தனி தீர்மானம்
கடந்த மே 10ஆம் தேதி விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவே பாடப்பட்டு வந்தது. அதேபோல், ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில்கூட வந்தே மாதரம் முதலாவதாக பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது சர்ச்சையையும், விமர்சனத்தையும் கூட்டியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்.
தீர்மானம் மட்டும் போதுமா?

சட்டமாக இயற்ற வேண்டும்
இதுகுறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, தீர்மானம் ஆளுநரை கட்டுப்படுத்தும் என்பதெல்லாம் சந்தேகம்தான் என்றும் திமுகவை பொறுத்தவரைக்கும் தீர்மானத்தை சட்டமாக இயற்ற வேண்டும், அப்படி செய்தால்தான் மத்திய அரசால் எதுவுமே செய்ய முடியாது என உறுதியாக தெரிவித்தார். பொதுவாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழ்நாட்டின் குரலாகவே பார்க்கப்படும் எனக்கூறும் திமுகவினர் இதுபோன்று ஏற்கனவே பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் அந்த தீர்மானங்கள் எல்லாம் கட்டாயமாக்கப்படவில்லை, மாறாக கடமைக்குதான் என்பதுபோல் இருக்கின்றன எனவும் கூறுகின்றனர்.

ஆளுநர் பதில் அளிப்பாரா?
இதுஒருபுறம் இருந்தாலும், உண்மையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சட்ட வலிமையை உண்டாக்குவதுதான் திமுகவின் நோக்கமா? அல்லது அரசியலுக்காக இப்படிப்பட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை திமுக சொல்வதுபோல தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமாக்கினால் ஒப்புதல் அளிக்க வேண்டியது யார்? என ஆராய்ந்தால் அதற்கு ஆளுநர் என்பதே பதிலாக உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சட்டம் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் என்பதால் அதற்கு ஆளுநரின் ஒப்புதலே போதுமானது எனவும் கூறப்படுகிறது. ஆனால், அரசின் முடிவை ஏற்று ஆளுநர் பதில் அளிப்பாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

2ஆவது முறை நிறைவேற்றினால்...
நாட்டின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதினால் குடியரசு தலைவருக்கு ஆளுநர் இதை அனுப்பி வைக்கலாம். அப்படி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டால் அதில் மத்திய அரசின் தலையீடு இருக்க வாய்ப்புண்டு. அதேநேரம், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் அதனை திருப்பி அனுப்பலாம். அதையும்தாண்டி, தமிழக அரசு மீண்டும் சட்டமாக இயற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். எந்த ஒரு மசோதாவையும் 2ஆவது முறை நிறைவேற்றினால் அதனை அவர்கள் ஏற்க வேண்டும், ஆளுநர் கையொப்பமிட வேண்டும் என்பது மரபாகவே இருந்து வருகிறது.

அடுத்தகட்ட நகர்வு
இப்படி பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழும் நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் அடுத்தகட்டமாக தமிழக அரசின் மூவ் என்ன? விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு திமுகவின் கோரிக்கையை ஏற்குமா? தீர்மானத்தை சட்டமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved