Also Watch
Read this
By: Fyrose Banu

நாகை அருகே கருங்கண்ணி, மீனம்பநல்லூர் ஊராட்சிகளில் குடிநீர் வராதை கண்டித்து மேலப்பிடாகை கடைத்தெருவில் தலையில் காலி குடங்களை சுமந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனம்பநல்லூர், கருங்கண்ணி, மேலப்பிடாகை, மகிழி, திருமணங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு வீடு ஜல்ஜீவன் திட்ட மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டாலும் முறையாக தண்ணீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து பல முறை சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று மேலப்பிடாகை கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற போராட்டத்தில் காலி குடங்களை தலையில் வைத்து சாலையில் அமர்ந்து போர்கால அடிப்படையில் குடிநீர் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

மேலும் எப்பாவது வரும் தண்ணீரும் அழுக்கு படிந்து கலங்களாக வருவதாக கூறி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெபஸ்தியம்மாள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 1 மணி நேரமாக நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டத்தில் நாகை திருத்திறைப்பூண்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved