Also Watch
Read this
By: Fyrose Banu

திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் ரூ.48 லட்சம் பண மோசடி.அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தியது போல் கணக்கு காட்டி கையாடல் செய்த கணக்காளர் மீது மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல், 2026ம் ஆண்டு வரை திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் அரசுக்கு திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் இருந்து செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்தாமல் பணத்தை செலுத்தியது போன்று ஆவணங்களை தயார் செய்தும், வங்கி முத்திரைகளை போலியாக தயாரித்து அலுவலகக் கோப்பில் அரசுக்கு பணம் செலுத்தியது போன்றும் கணக்கு காட்டி உள்ளார்.
இது தொடர்பாக வனச்சரக தணிக்கை குழுவினர் ஆய்வு செய்த போது கடந்த 2025 ஆம் ஆண்டில் 39 லட்சத்து 35 ஆயிரத்து 763 ரூபாயும், 2026 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 76 ஆயிரத்து 663 ரூபாய் உட்பட மொத்தம் 48 லட்சத்து 12,426 ரூபாய் பண மோசடி செய்துள்ளது தெரியவந்தது.இது தொடர்பாக அலுவலக கண்காணிப்பாளர் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சிவக்குமார் தற்போது தேனி மாவட்ட வனச்சரக அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வரும் நிலையில் முதல் கட்டமாக சிவக்குமாரை வனத்துறை அலுவலகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved