Also Watch
Read this
By: Fyrose Banu

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருபுவனம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து இந்த ஆர்பாட்டத்தை நடத்தியது. தமிழ்நாடு வாணிப கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கவுன்சில் தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுபான சில்லறை விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேபோல் மதுபான கடைகளை நடத்தும் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வாடகை மற்றும் மின் கட்டணத்தை செலுத்த வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


மேலும் டிஜிட்டல் பரிவர்தனைக்கு 5 சதவீதம் கட்டணம் வசூலிப்பதை நிர்வாகமே ஏற்று கொள்ள வேண்டும். பணிக்கு வந்து செல்லும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய செலவினங்களுக்கான தொகையை வழங்க வேண்டும். காலி அட்டைப்பெட்டிகளுக்கு 50 சதவீதம் கழிவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபானங்களை தேவை பட்டியலின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். மேற்பார்வையாளர்கள் விருப்பத்திற்கு மதுபான வகைகளை திணிக்க கூடாது. அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் பணியாற்றும் மதுபான கடை ஊழியர்களுக்கு அதற்கு ஈடாக ஈட்டு விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved