Also Watch
Read this
’அதிமுக ஆர்ப்பாட்டத்தில், சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்தில் பங்கேற்க முடியாது,’ என எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ’கட்சியில் பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்குவதாக அளித்த வாக்குறுதி என்ன ஆனது?’ என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல...
இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறி இருப்பதாவது;
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில், மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, விவசாயிகள் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாமல் விதிமுறை விதித்துள்ளதை கண்டித்தும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், பொதுச் செயலாளர் அறிவித்த பட்டியலில், ராமநாதபுரம் - நத்தம் விஸ்வநாதன், தேனி - எஸ்.பி.வேலுமணி, சேலம் -பி.தங்கமணி, ராணிப்பேட்டை - கே.பி.அன்பழகன் என்று, அவரவர் சொந்த மாவட்டங்களை தவிர்த்து, வேண்டுமென்றே வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது, இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

வாக்குறுதி என்ன ஆனது?
கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைவருக்கும், அவரவர் வகித்த பொறுப்புகளை மீண்டும் திரும்ப வழங்கப்படும் என பொதுச் செயலாளர் உறுதியளித்தார். ஆனால், மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கப்படவில்லை, புதிய பொறுப்புகளில் நியமனம் செய்து பொதுச் செயலாளராகிய தாங்கள் வெளியிட்ட அறிவிப்பை, நாங்கள் யாரும் ஏற்றுக் கொள்ள இயலாது, எங்களுக்கு நாங்கள் ஏற்கெனவே, வகித்து வந்த பதவி திரும்ப வழங்க வேண்டும், என எழுத்து மூலம் எங்கள் நிலைப்பாட்டினை தங்களுக்கு தெரிவித்தும், அதற்கு தாங்கள் எந்த பதிலும் இல்லாமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறீர்கள்.

விசுவாசிகள் புறக்கணிப்பு
இந்த சூழ்நிலையில், தாங்கள் தற்போது, கட்சி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்த எங்களது சொந்த மாவட்டத்தை விடுத்து, வேறு மாவட்டங்களுக்கு நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளீர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசிகளை புறக்கணிக்கும் வகையில், இதுபோன்று அறிவிப்பு வெளியிடப்படுவதாக உள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.75,000 வரையிலான வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும், ரூ.75,000க்குமேல் கடன் பெற்ற விவசாயிகளின் வங்கி கடனில் 50% அதாவது ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்ய த.வெ.க அரசின் அறிவிப்பு, ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, பாகுபாடின்றி அனைத்து விவசாயிகள் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய த.வெ.க அரசு முன் வரவேண்டும்.

ஆதரவு, ஆனால் பங்கேற்பில்லை
கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சனை மற்றும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற்றிடவும், அது மட்டுமின்றி, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காக்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். இதில் மாறுபட்ட கருத்து வேறுபாடு எதுவுமில்லை. எனவே, அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். வேறு மாவட்டங்களில் சென்று கலந்து கொள்ள இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved