Also Watch
Read this
இபிஎஸ் எடுக்கும் தன்னிச்சையான முடிவால், தவெக உடனான கூட்டணி வாய்ப்பை இழந்ததாக சுட்டிக்காட்டி எஸ்.பி.வேலுமணி தரப்பினர் மீண்டும் இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தி கூட்டறிக்கையை வெளியிட்டு உள்ளனர். குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி தரப்பினர் பரிந்துரைத்த வேட்பாளர்களின் தேர்தல் தோல்விக்கு அதிமுக தலைமை பொறுப்பு அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டறிக்கையால்...
அதிமுகவின் தலைமை பொறுப்பை தக்க வைத்துக்கொள்ள திக்குமுக்காடி வரும் இபிஎஸ்க்கு மேலும் ஒரு தலைவலியை கொடுத்திருக்கிறது எஸ்.பி.வேலுமணி கேங்கின் கூட்டறிக்கை.
ஜெயலலிதா மறைவுக்கு பின் பல இன்னல்களை சந்தித்த அதிமுகவில், சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் என அடுத்தடுத்து முக்கிய தலைவர்களையெல்லாம் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார் இபிஎஸ். கட்சியின் பொதுச் செயலாளர் என்ற உச்ச நிலைக்கு செல்ல இபிஎஸ்க்கு பக்கபலமாக இருந்தவர்களில் முதன்மையானவர் எஸ்.பி.வேலுமணி.

தவெக உடன் கூட்டணி
இப்படி இருக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகாக, வெகுண்டெழுந்த வேலுமணி, சீனியர் தலைவர்களையெல்லாம் அணிதிரட்டி தனி அணியை கட்டி எழுப்பினார். இபிஎஸ்க்கு போட்டியாக, செயல்பட்ட எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு தவெக கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம் பெற்றுவிடலாம் என மனக்கோலம் போட்டது.

வெற்றி வாய்ப்பு தகர்ந்தது
ஆனால், முதலமைச்சர் விஜயோ அமைச்சர் பதவியெல்லாம் கொடுக்கவே முடியாது என கறார் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதனால் தாய்க் கழகத்திற்கு கமுக்கமாக திரும்பிய எஸ்.பி வேலுமணி தரப்பு தற்போது, அதிமுகவில் இருந்து கொண்டே இபிஎஸ்-ஐ நெருக்கடிக்குள் தள்ளும் வேலையை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு வெளியிட்டிருக்கும் திடீர் அறிக்கையில், சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தவெக உடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் கடந்த இரு சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு, இபிஎஸ் எடுத்த தன்னிச்சை முடிவுகளால் தகர்ந்து போனதாக அந்த கூட்டறிக்கையில் பொறுமினர்.

தன்னிச்சையான முடிவால்...
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது, தம்மோடு கூட்டணியாக பயணித்த தேமுதிக, புதிய தமிழகம், தனிக்கட்சியாக இருந்த சரக்குமாரை அரவணைக்காமல் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெளியேற்றி விட்டீர்கள் என இபிஎஸ்-ஐ விளாசி உள்ளனர். இதேபோல் 2026 சட்டமன்றத்தேர்தலில் தம்மை தேடி வந்த தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றி விட்டதாக வேதனைகளை அடுக்கி கொண்டே சென்றனர்.

அதிமுகவை வலுப்படுத்த வேண்டும்
2021, 2024, 2026 தேர்தல்களில் அதிமுக சந்தித்த தோல்விகளுக்கு, தவறான கூட்டணி முடிவு, உள்கட்சிக் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை நீக்கம் செய்தது போன்ற நடவடிக்கைகளே காரணம் என முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கடும் விமர்சனம் எழுப்பியுள்ளனர். பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அமர்த்தி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என அவர்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தினர்.

ஆரம்பம் இது தான்...
இதனிடையே, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி, தவெகவுக்கு ஆதரவளித்த தங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக கூட்டணி பேசியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? என கேள்வி எழுப்பினார். திமுக - அதிமுக கூட்டணி என்பதுதான் பிரச்சனையின் ஆரம்பம் என விளாசினார்.

கட்சியில் இருந்து நீக்க...
இதனிடையே எஸ்.பி.வேலுமணி தரப்பு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அதிமுக கொறாடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி தரப்பினர் பரிந்துரைத்த வேட்பாளர்களின் தேர்தல் தோல்விக்கு அதிமுக தலைமை பொறுப்பு அல்ல என்றும், வாய் போன போக்கில் இபிஎஸ் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்துவதா? எனவும் கேள்வி எழுப்பினார். தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் பதவி கிடைக்காத வயிற்றெரிச்சலில் எஸ்.பி.வேலுமணி தரப்பு பேசி வருவதாக விமர்சித்துள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தவெக உடன் தொடர்பு வைத்துள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்க கோரிக்கை விடுப்போம் என எச்சரித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved