Also Watch
Read this
பெரும் பிரளயமே வெடித்து ஓய்ந்தாற்போல், ஈரணியாக பிரிந்து ஓரணியாக இணைந்துள்ள அதிமுகவில், பறிக்கப்பட்ட பதவி விவகாரம் தொடர்பான மனக்கசப்பு 3 நாட்களுக்கு முன்புவரைகூட தலைமைக்கு பகிரங்க வார்னிங்காக மாறி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கட்சித்தாவல் தடை சட்டத்தில் பதவி பறிபோனால் என்ன செய்வது? என்ற ஒரே காரணத்திற்காக,வேலுமணி அணி அமைதியாக இரட்டை இலைக் கிளையில் அமர்ந்திருப்பதாகவும், இலையைவிட்டு இறங்குங்கள் என இபிஎஸ் வாயாலேயே சொல்லிவிட்டால் தங்களின் பதவிக்கு பங்கமில்லை எனவும் தலைமையை நோக்கி எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா காமெடி போல...
’கல்லூரி’ படத்தில் வரும் காமெடி காட்சிதான் அதிமுகவில் உள்ள இபிஎஸ் அணிக்கும், வேலுமணி அணிக்கும் சைல்ண்ட்டாக நிஜத்திலேயே உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கிறாம்.
2026 சட்டமன்ற தேர்தல் மூலம் பொலிட்டிக்கல் ரேஸில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது அதிமுக. தொடர் தோல்வியை தழுவ காரணமே இபிஎஸ்தான் எனக்கூறி வீராவேசமாக பிரிந்து சென்ற எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவினர் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த கோபத்தில் கட்சிப் பதவிகளை பறித்து இபிஎஸ் ஒருபக்கம் தனது பவரை காட்ட, மறுபக்கம் கட்சித்தாவல் தடை சட்டம் பாய்ந்தால் உள்ள பதவியும் பறிபோகுமே என்ற கிலி வேலுமணி தரப்பை வியர்க்க வைத்தது. அதனால், போன தடத்தில் புல் முளைப்பதற்குள் மீண்டும் இபிஎஸ் கூடாரத்தையே நோக்கி ஓடி வந்தனர் வேலுமணி அணியினர்.

எம்எல்ஏக்கள் ராஜினாமா
இதில், சிலர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே கோபக்கனலை கொஞ்சமும் குறைக்காத சி.வி.சண்முகம் மட்டும் சமரசமா? கிலோ எவ்வளவு? என்பதுபோல் முறுக்கிக் கொண்டிருக்கிறார். இதனிடையே, பறித்த பதவிகளுக்கு பதில் அலங்கார பதவிகளை கொடுத்து வேலுமணி தரப்பை அமைதியாக்க முயன்றார் இபிஎஸ். ஆனால், இத்தனை ஆண்டுகள் அரசியலில் நீந்தி கரை கண்டிருக்கும் தங்களுக்கு தெரியாதா எது பவர்ஃபுல் பதவி? எது டம்மி பதவி? என எங்கு மைக் கிடைத்தாலும் அதிருப்தியை கொட்டி தீர்க்கின்றனர் வேலுமணி தரப்பு.

தொடர்ந்து புகைச்சல்
அதிலும், தலைமை தக்க முடிவெடுக்க தவறினால் விளைவு வேறுமாதிரியாக இருக்கும் என கடந்த 3 நாட்களுக்கு முன்பு நத்தம் விஸ்வநாதன் பகிரங்க எச்சரிக்கையே விடுத்தார். அதிமுகவினர் என்னதான் ஓரணியாக இணைந்தாலும் நீறு பூத்த நெருப்புபோல புகைச்சல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையனை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

எஸ்.பி.வேலுமணி எதிர் கேள்வி
இது, தவெகவில் இணைவதற்கான சந்திப்பு தான் என வெளியில் பேச்சு அடிபட ஆரம்பிக்க, நாங்கள் அதிமுகவில் இருப்பது பிடிக்கவில்லையா? தங்களை வளர்த்தெடுத்ததே அதிமுகதான், திமுக எதிர்ப்பில் தவெகவிற்கு ஆதரவளித்தால் அந்த கட்சியிலேயே இணைந்துவிடுவோம் எனக்கூறுவதா? எனக்கூறினார் எஸ்.பி.வேலுமணி. இவராவது மென்மையாக பதலளித்துவிட்டு கடந்து சென்றார்.

அதிமுகவில் என்னதான் நடக்கிறது?
ஆனால், அமைச்சர்களை சந்திக்கும் நீங்கள் எடப்பாடி பழனிசாமியை இன்னமும் சந்திக்கவில்லையே? என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், முகத்தில் எள்ளை அள்ளிப் போட்டால் நெருப்பின்றியே வெடிக்கும் அளவுக்கு கோபத்தில் வெடித்தார் சி.வி.சண்முகம். இபிஎஸ்சுக்கும் எங்களுக்கும் என்ன உள்ளது? அவரை ஏன் நாங்கள் சந்திக்க வேண்டும்? தேவையற்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது எனக்கூறிவிட்டு விருட்டென கிளம்பி சென்றார்.

வேலுமணியும், சி.வி.சண்முகமும் இப்படி பேசி இருக்கும் நிலையில் அதிமுகவில் என்னதான் நடக்கிறது? எலியும் பூனையுமாக எப்படிதான் ஒரே கட்சியில் இருஅணியினர் இருக்கிறார்கள்? பொதுச் செயலாளருக்கு வேலுமணி அணியினர் கை உயர வணக்கம்கூட வைத்துக் கொள்வதில்லையாமே? இதெல்லாம் உண்மையா? என அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது அங்கு திரிசங்கு நிலை நிலவுவதாக கூறப்படுகிறது.

ஆடுபுலி ஆட்டம்
அதாவது, நாங்களே வெளியில் சென்றால் கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் பதவி பறிபோகும், அதனால் உங்கள் வாயால் நீங்களே சொல்லுங்கள், கட்சித்தாவல் தடை சட்டம் தங்கள் மீது பாயாது என வேலுமணி தரப்பு இபிஎஸ்ஸை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால், கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் என்பதுபோல நான் சொல்வேன் என நினைத்தாயோ? அது ஒருநாளும் நடக்காது, அதேபோல் பறித்த பதவிகளையும் கண்ணில் காட்டமுடியாது என இபிஎஸ் வாயை திறக்காமல் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறாராம். ஆக, தவெகவில் இணையும் எண்ணம் வேலுமணி தரப்புக்கு இருந்தாலுமே அதனை வெளிப்படையாக சொல்ல முடியாத இக்கட்டான நிலையில் உள்ளார்களாம்.