Also Watch
Read this
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தோல்வியைத் தவிர வேறு எதையும் அதிமுக சந்திக்கவில்லை என்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். 47 தொகுதிகளின் வெற்றிக்கு இபிஎஸ் காரணம் என்றால், மற்ற தொகுதிகளில் செல்லாக்காசாகி விட்டாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுக தோல்விக்கு காரணம்
சட்டப்பேரவை வளாகத்தில் சி.வி.சண்முகம் கூறியதாவது;
எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என எதிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. அதிமுக தேர்தலில் தோற்றதற்கு, முறையான கூட்டணி அமைக்காததும், கட்சியை விட்டுப் பிரிந்தவர்களை மீண்டும் இணைக்காததுமே முக்கியக் காரணம்.

அதிமுக படுதோல்வி
வட மாவட்டங்களில் அதிமுக 34 தொகுதிகளில் வென்றதற்கு பாமக கூட்டணியில் இருந்தது தான் காரணம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக முழுமையாகத் தோல்வி அடைந்து உள்ளது.

வெற்றியும் தோல்வியும்
தேர்தலில் வெற்றி பெற்றால், இபிஎஸ் தான் காரணம் என்கிறார்கள். ஆனால் தோல்வி அடைந்தால் மாவட்டச் செயலாளர்கள் தான் காரணமா? எடப்பாடி பழனிசாமியின் சொந்த செல்வாக்கால் தான், 47 தொகுதிகளில் அதிமுக வென்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். 47 தொகுதிகளில் மட்டுமே செல்வாக்கு என்றால், மற்ற இடங்களில் அவருக்கு செல்வாக்கு இல்லையா? அவரது சொந்த மாவட்டமான சேலத்திலேயே 7 தொகுதிகளில் ஏன் அதிமுகவிற்கு செல்வாக்கு இல்லை?

காங்கிரஸ் கட்சியை போல்...
தன் மீதான தவறுகளை மறைக்க, இபிஎஸ் பொய்யை பரப்புகிறார், தனது குடும்பம் மற்றும் மகனைக் காப்பாற்ற, அதிமுகவை சுயநலமாகப் பயன்படுத்துகிறார். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா செய்தது போல், இவரை நாங்கள் ராஜினாமா செய்ய கூறவில்லை.

ஆனால், அதிமுக பொதுச் செயலாளராக இருந்துகொண்டு தொடர் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை, இபிஎஸ் ஆராய வேண்டும்.
இவ்வாறு சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved