Also Watch
Read this
சென்னை, வேளச்சேரியில் உள்ள தனியார் மாலில் நடைபெறவிருந்த "மீசைய முறுக்கு 2" படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி பங்கேற்பதை அறிந்து கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது. தன்னை பார்ப்பதற்காக ஆவலுடன் திரண்டு ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்களுக்காக ஹிப் ஹாப் ஆதி வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தார்.

குவிந்த ரசிகர் கூட்டம்
நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியை பார்க்க திரண்ட இளைஞர் பட்டாளத்தால், மாலுக்குள் கூட்ட நெரிசலும், சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு சென்னை வேளச்சேரியே ஸ்தம்பித்த வைத்தது. என்ன நடந்தது?

ராப் இசை பாடகர் மற்றும் இண்டிபெண்டண்ட் இசைக்கலைஞராக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த ஹிப் ஹாப் ஆதி, ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமான ’மீசைய முறுக்கு’ படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. வரும் செப்டம்பர் 25ஆம் தேதி படம் திரைக்கு வருவதை ஒட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் சனிக்கிழமையன்று புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதியே அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட குதூகலமான இன்ஸ்டா இளசுகள், வேளச்சேரி பீனிக்ஸ் மாலையே திணற விட்டனர்.

போக்குவரத்து நெரிசல்
நேரம் போகப் போக ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்ட நிலையில், பீனிக்ஸ் மால் நோக்கி படையெடுத்த வாகனங்களால் வேளச்சேரி முழுவதும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்லவே, விபரீதத்தை உணர்ந்த போலீசார் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் நிலைமை கைமீறிச் சென்றதை அறிந்து ரத்து செய்தனர். ரசிகர்கள் ஏமாற்றத்துடன் நடையை கட்ட, ஹிப் ஹாப் ஆதியும் மேடை ஏறாமலே புறப்பட்டார்.

வீடியோ வெளியிட்ட ஆதி
பீனிக்ஸ் மாலில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரசிகர்களால், வேளச்சேரியின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலால் முடங்கின. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வேலை முடிந்து வீடு திரும்பியவர்களும், இந்த நிகழ்ச்சி பற்றியே அறியாத எளிய மக்களும் சேர்ந்தே சிரமத்துக்குள்ளாகினர்.

தன்னை பார்க்க வந்து சிரமத்துக்கு ஆளான ரசிகர்களுக்காக வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஆதி, காவல்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாதுகாப்பு கருதியே நிகழ்ச்சியை ரத்து செய்ததாக விளக்கமும் அளித்தார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பிரபலங்கள், அனைத்து விளைவுகளையும் முன்கூட்டியே கணித்து, சரியான திட்டமிடலுடன் நடத்தினால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பதே பெரும்பாலான மக்களின் குரலாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved