Also Watch
Read this
கரூரில், 31 பேருக்கு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
தமிழக அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு வேலை வழங்கும் போது, அதை வழங்கக் கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார்? என கரூர் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியலை புகுத்த வேண்டாம் என்றும் மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

கரூரில் தவெக பிரச்சாரம்...
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவெக ஆட்சியில்...
இதற்கிடையே, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. கரூரில் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.

அரசுப்பணிக்கு எதிராக வழக்கு
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாதகவின் தீரன் திருமுருகன், மதுரை வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்ட 3 பேர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த நிலையில், நியமன ஆணை ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் செல்வகுமார், ஆனந்தஜோதி ஆகியோர் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ‘அரசு வழங்கிய பணி ஆணை கருணை அடிப்படையிலானது அல்ல, மாறாக ஒரு குடும்பத்தின் மறுவாழ்வுக்கானது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரினர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆக.14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, கே.வினோத் சந்திரன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேல்முறையீட்டை எதிர்த்த மனுதாரரை நோக்கி, "அரசின் கொள்கை முடிவுகளில் கேள்வி எழுப்ப நீங்கள் யார்? விபத்தில் ஒரு குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த நபர் உயிரிழக்கும் போது, அவர்களின் மகன் அல்லது மகளுக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று நீதிபதிகள் காரசாரமாக கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved