Also Watch
Read this
கரூர் துயர சம்பவத்தில், தங்கள் உறவுகளை இழந்துள்ள வாரிசுதாரர்கள் முதலமைச்சர் விஜய் கையால் அரசு வேலைக்கான பணி ஆணையை வாங்கிய போது, கண்ணீர் வடித்தது காண்போரை கலங்க வைத்தது. அந்த காட்சியை கண்டு உடைந்த முதலமைச்சர் விஜய்யும் எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியாமல் மௌன மொழியில் அவர்களை தேற்ற, அரசு வேலைக்கான ஆணையை பெற்றவர்களின் மனநிலை அவரவர் வார்த்தைகளில் இதோ...

அரசுப் பணி ஆணை வாங்கும் போது...
வழக்கமாக அரசு வேலை கிடைத்தால் ஆனந்தத்தில் தான் கண்ணீர் வரும். ஆனால், இந்த அரசாணையை வாங்கிய 31 பேரும் தங்கள் உறவுகளை இழந்த வலியில் அழுதபடியே முதலமைச்சர் கையால் பெற்றுக்கொள்ள, அதனை கொடுத்த முதலமைச்சருமே பேச வார்த்தையின்றி கண்கலங்கித் தான் போனார்.

கரூர் துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைக்காக பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய். அந்த ஆணையை வாங்கிய வாரிசுதாரர்கள் உடைந்து அழுதனர். அப்போது, ஒரு அண்ணனாக, தம்பியாக, மகனாக என பல வடிவங்களில் நான் இருக்கிறேன், எதற்கும் அஞ்ச வேண்டும் என்பதுபோல் அவர்களின் தோள்களை பிடித்து தேற்றினார் முதலமைச்சர் விஜய்.

இதுவே போதும்...
அந்த ஆணையை வாங்கிய வாரிசுதாரர்களும் தங்கள் உணர்ச்சிக்குவியலை கொட்டித் தீர்த்தனர். தனது கணவர் ரமேஷை இழந்த கோடங்கிப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கவி, தனது வாழ்வாதாரத்திற்கு ஒரு வழி கிடைத்துள்ளது, இதுவே போதும் என, தனது குழந்தையை இடுப்பில் இறுக்கியபடியே கூறினார்.

கடைசி வரை இருப்பேன்...
அதேபோல், வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த நிவேதிதா தனது கணவர் மணிகண்டன் உயிரிழந்தபிறகு பிள்ளைகளை எப்படி வளர்க்கப்போகிறேன்? என்ற கவலையில் இருந்ததாகவும், இனி சுயமாக தனது குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியும் எனவும் கூறியதோடு கடைசிவரை தான் இருப்பேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

கண் கலங்கிய முதல்வர் விஜய்
முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகையான அஜிதாவை இழந்து தவிக்கும் அவரது அண்ணன் அமர்நாத், தனது தங்கையின் புகைப்படத்தை கையில் பச்சை குத்தி மை பிளட் என குறிப்பிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அவர், முதலில் அரசு வேலை வேண்டாம் எனக்கூறிய நிலையில், தற்போது வேலை வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல், தனது ஒரே ஒரு மகனையும் இழந்துவிட்டு தவித்த தனலட்சுமியும் அரசு வேலைக்கான ஆணையை வாங்கியதோடு முதலமைச்சரும் அழுததாக கூறினார்.

இன்னொரு அண்ணன்...
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை இழந்து கரூர் கூட்டநெரிசலில் தனது அண்ணனையும் இழந்த பிரியதர்ஷினி, மாமா உயிரோடுதான் இருப்பதாகவும், ஊருக்கு சென்றுள்ளதாகவும் கூறிதான் தனது மகனையே சமாளித்து வருவதாக தெரிவித்தார்.

அதோடு, தனது அண்ணன் உயிரிழந்து விட்டதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என வருத்தப்பட்ட பிரியதர்ஷினி, என் கண்ணுக்கு முதலமைச்சர் இன்னொரு அண்ணன் போன்றுதான் தெரிவதாகவும் நா தழுதழுக்க பேசினார்.