Also Watch
Read this
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக கரூருக்கு வந்த முதலமைச்சர் விஜயை காண திரண்ட மக்கள் எந்த அளவுகோலாலும் அளக்க முடியாத அளவுக்கு அளப்பரிய அன்பை அள்ளிக் கொடுத்து உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.

கரூரில் முதல்வர் விஜய்
நாட்டையே உலுக்கு உலுக்கிய தவெக பிரச்சார பெருந்துயர சம்பவம் நடந்திருந்தாலும், விஜய் மீதான பாசம் கரூர் மக்களுக்கு இம்மியளவும் குறையவே இல்லை என்பதற்கு சான்று தான் ஆர்ப்பரித்த கூட்டம்.

கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி வெறும் தவெக தலைவராக மட்டுமே கரூருக்கு வந்த விஜய், இம்முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று மாஸ் எண்ட்ரியை கொடுத்தார். சென்னையிலிருந்து விமானத்தில், திருச்சியில் இறங்கிய விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூருக்கு சென்ற நிலையில் கான்வாய்களுடன் பயணித்தார்.

உற்சாக வரவேற்பு
பொதுவாக கட்சி நிகழ்ச்சிக்கு வந்தால் முதலமைச்சர் விஜய் வெள்ளை சட்டை அணிவார், அதே சட்டமன்றம் சென்றால் கோட் சூட், அரசு நிகழ்ச்சி என்றால் வெள்ளை சட்டையும், கருப்பு நிற பேண்டையும் அணிவார். ஆனால், இந்த கரூர் பயணத்தில் கருநீலநிற சட்டையும், கருப்பு பேண்ட் காஸ்டியூமில் வந்திருந்தது கவனத்தை ஈர்த்தது.

நகர் வலம் வந்த முதலமைச்சர் விஜய்க்காக, இருமருங்கிலும் காத்திருந்த மக்கள் அவரை கண்டதும் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, மலர்களை தூவியும், முத்தங்களை அள்ளிக்கொடுத்தும் கரூருக்கு வரவேற்றனர்.

ஏமாற்றத்திலும் மகிழ்ச்சியே...
முதலமைச்சர் விஜயை சில மணித்துளிகள் பார்த்ததற்கே இளைஞர்களும், இளம்பெண்களும் தலை கால் புரியாமல் இன்பத்தில் துள்ளி குதித்த காட்சியை பார்க்கையில் அவர்கள் விஜய் மீது வைத்திருந்த பாசத்தையே காட்டியது.

முருகன், விஜய்க்கு வேல் கொடுப்பதை போன்று போட்டோ ஃபிரேம் போட்டு ரசிகர் கொண்டு வந்த நிலையில், அதனை கொடுக்க முடியாமல் போனதால் வருத்தம் இருந்தாலும் கூட அவரை பார்த்ததே போதும் என மனதை தேற்றி கொண்டனர். ஒரே frame-ல் இரு கடவுள்கள் என உணர்ச்சியில் அந்நபர் பேசினார்.

ஒரு வருட ஏக்கம்
கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் விஜயை காண மக்கள் கால் கடுக்க காத்திருந்தனர். அதேபோல் மக்களை காண திருக்காம்புலியூர் ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா, உழவர் சந்தை, லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூரில் ரவுண்டானா, சுங்ககேட், தாந்தோன்றிமலை வழியாக விஜய் நகர் வலம் வந்தார்.

தவெகவின் அரசியல் வாழ்க்கையிலும், முதல்வராக வேண்டுமென்ற கனவுக்கும் நங்கூரமிட்ட கரூர் மாவட்டத்துக்கு, செல்ல வேண்டுமென்ற ஒரு வருட ஏக்கம் விஜய்க்கு தீர்ந்தது.