Also Watch
Read this
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனிக்கு, இரண்டு நாடுகளில் ஐந்து நகரங்களில் ஒரு வார காலத்திற்கு மாபெரும் இறுதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று துக்கத்தை வெளிப்படுத்தினர்.

பாரசீக தேசத்தின் செய்தி
இறுதியாக அயத்துலா கமேனியின் சொந்த ஊரான மஷாத் (Mashhad) நகரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொல்லப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனிக்கு பிரம்மாண்டமான இறுதிச் சடங்கு நடத்தியதன் மூலம், ஈரான் டிரம்புக்கு சவால் விடுத்துள்ளது. கமேனி புதைக்கப்படவில்லை, ஈரான் முழுவதும் விதைக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் பாரசீக தேசம் உலகிற்கும் அமெரிக்காவிற்கும் சொல்லியுள்ள செய்தி.
லட்சக்கணக்கான மக்கள்
பல ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடியையும், உலகின் மிக வலிமையான இரண்டு ராணுவங்களுக்கு எதிரான பெரும் செலவுமிக்க போரையும் மீறி, தான் யார் என்பதை ஈரான் நிரூபித்திருக்கிறது. ஈரான், ஈராக்கில் அயதுல்லா அலி கமேனி உடல் எடுத்துச் செல்லப்பட்ட நகரங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டனர். இந்த பிரம்மாண்டமான நிகழ்வு, உலகிற்கும் ஈரானின் எதிரிகளுக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஒரு மாபெரும் சாதனை
ஈரான் ஆட்சியாளர்களை வீழ்த்துவதற்காக நடத்தப்பட்ட ஒரு போரில் வெற்றி பெற்றதோடு, கொல்லப்பட்ட உச்ச தலைவரை, மீண்டெழும் திறனின் சின்னமாக அழியாத புகழடையச் செய்துள்ளது, மொஜ்தபா கொமேனி அரசு. கண்ணியமும் மேன்மையும் வாய்ந்த ஈரான் தேசம், அடக்குமுறைக்கு முன்னால் மௌனமாக இருக்காது என்பதையும், அயதுல்லா அலி கமேனி சிந்திய ரத்தம் வீணாகி விடாது என்பதையும் உலகம் அறியச் செய்துள்ளதாக அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வரும் நாடாளுமன்ற சபாநாயகரான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்தார். அதாவது ஒரு தேசத்தின் மன உறுதிக்கு இருக்கும் மகத்துவத்தை உலகிற்கு வெளிக்காட்டும் ஒரு மாபெரும் சாதனையை ஈரான் செய்துள்ளது.
பிரம்மாண்டமான நிகழ்வு
கமேனி இறுதிச் சடங்கு நிகழ்விற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகள், திட்டமிட்ட குறியீட்டு முக்கியத்துவத்தை கொண்டவை. இந்த முழு நிகழ்வும் இஸ்லாமிய மாதமான முஹர்ரம் மாதத்தில் அரங்கேறியுள்ளது. இது, ஷியா இஸ்லாத்தில் துக்கம், துரோகம் மற்றும் தியாகம் ஆகியவற்றுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்ட ஒரு காலகட்டம். குறிப்பாக, ஷியா புனிதர்களில் ஒருவரான இமாம் ஹுசைனின் 7ஆம் நூற்றாண்டு தியாகத்துடன் இது தொடர்புடையது. கர்பலா போரில் கொல்லப்பட்ட, நபிகள் நாயகத்தின் பேரர் இமாம் ஹூசைனுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இமாம் ஹூசைனாக அயதுல்லா அலி கமேனி அறியப்படுவதற்கான எல்லா வழிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை விஞ்சும் வகையில், ஒரு பிரம்மாண்டமான நிகழ்வுடன் அயதுல்லா கமேனி வழியனுப்பப்பட்டுள்ளார். கமேனியின் உடல் 250வது அமெரிக்க சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது தற்செயலானது அல்ல.

மரணத்திலும் தோற்கவில்லை
உறுதி குன்றாத அமெரிக்க எதிர்ப்புடனும், மேற்கத்திய நாடுகளின் நரித்தனத்திற்கு விலைபோகாத குணத்துடனும் 37 ஆண்டுகால ஆட்சியை நடத்திய கமெனி, பிப்ரவரி 28 அன்று, அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டார். ஆயினும், அவரது இறுதிச் சடங்கு, ஈரானின் மூன்று நகரங்களிலும் அண்டை நாடான ஈராக்கில் உள்ள இரண்டு புனிதத் தலங்களிலும் ஒரு வெற்றிப் பேரணியாக அரங்கேற்றப்பட்டது. இதன் மூலம், அந்த மதகுரு மரணத்திலும் கூடத் தோற்கவில்லை என்பது காட்டப்பட்டது.
சக்தி வாய்ந்த தலைவர்
ஈரானின் உச்ச தலைவராகப் பல பத்தாண்டுகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் எதிர்த்துப் போராடிய அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். ஆனால் உண்மையில் நடந்திருப்பதோ வேறு. அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் படுகொலை செய்யப்பட்டு ஈரானியர்கள் மனங்களில் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து செய்த படுகொலை, வாழ்ந்த காலத்தில் இருந்ததை விட, மரணத்திற்கு பிறகு குறியீட்டு ரீதியாக கமேனியை மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஆக்கியுள்ளது.

சிறப்பாக செய்து முடிக்கப்பட்ட...
ஈரானில் பிரம்மாண்ட இறுதி ஊர்வலங்கள் நடத்தப்படுவது முதல் முறை அல்ல. 1989ல் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா ரூஹல்லா கொமேனி, 2020ல் படைத் தளபதி காசிம் சுலைமானி ஆகியோரின் இறுதி ஊர்வலங்கள் பிரம்மாண்டமாக நடைபெற்றன. ஆனால் அந்த இரண்டு ஊர்வலங்களும் குழப்பத்தில் முடிந்து, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன் நிறைவடைந்தன. ஆனால், அயதுல்லா கமேனியின் உடலைப் பாதுகாப்பது, லட்சக்கணக்கான மக்களை நிர்வகிப்பது, வெளிநாட்டுப் பிரமுகர்களை உபசரிப்பது மற்றும் இரண்டு நாடுகளில் உள்ள ஐந்து நகரங்களில் முக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது ஆகிய மாபெரும் பணி சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தேசிய விடுமுறை
கமேனி உடல் காட்சிக்கு வைக்கப்பட்ட முதல் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்குத் தொடங்கியது. தெஹ்ரானின் பிரம்மாண்டமான மசூதி வளாகத்தில் கமேனியின் உடல் வைக்கப்பட்டது. சுட்டெரிக்கும் ஜூலை மாத வெயிலில், கூட்டத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்க, அந்த வளாகம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த் தெளிப்பான்களை தீயணைப்பு வீரர்கள் பொருத்தினர். இறுதி ஊர்வலத்தின் போது தலைநகரின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டன. மேலும், கமேனியின் உடல் கடந்து செல்லும் நகரங்களில் தேசிய விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.

பிரம்மாண்டமான ஏற்பாடுகள்
ஒன்றே முக்கால் கோடி மக்கள் தொகை கொண்ட நகரமான தெஹ்ரானில், அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துக்கம் அனுசரிப்பவர்களுக்கு உணவளிக்க 5 கோடி ரொட்டித் துண்டுகள் தயாரிக்கப்பட்டன. இதற்காக தலைநகரில் 16 நடமாடும் ரொட்டி தயாரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. 2,500 ஆம்புலன்ஸ்கள், 21 ஹெலிகாப்டர்கள், 100 ட்ரோன்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், அவசரத்திற்கு ஏற்றுவதற்கு 5 லட்சம் லிட்டர் ரத்தம் மற்றும் மருத்துவ திரவங்கள், 20,000 சிகிச்சை அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
ஒன்றரை கோடி பேர்...
தெஹ்ரான், மஷாத் மற்றும் கோம் நகரங்களுக்கு வருகை தருபவர்களுக்கு இடமளிக்கும் வகையில் மசூதிகள், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள் மற்றும் கலாச்சார மையங்களும் தயார் செய்யப்பட்டன. மூன்றாம் நாளில், தலைநகரின் கிழக்கு பகுதியிலிருந்து அதன் மேற்கு எல்லை வரை ஒரு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கமேனியின் உடல், புனித நகரமான கோமில் நடைபெற்ற சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பலாவில் உள்ள ஷியாக்களின் புனிதத் தலங்களுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், கமேனியின் பிறந்த ஊரான மஷாத்தில் உள்ள இமாம் ரெஸா அடக்கத் தல (Imam Reza Shrine)வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மொத்தம் ஒன்றரை கோடி பேர் வரை கலந்துகொண்ட இந்த இறுதிச் சடங்கு நவீன வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதிச் சடங்காக அமைந்துவிட்டது. 900 வெளிநாட்டு நிருபர்கள் உட்பட 14,000 செய்தியாளர்கள் இந்நிகழ்ச்சியைப் பதிவு செய்துள்ளனர்.

நாடு கடந்த தருணம்...
முன்னாள் உச்ச தலைவரின் உடலை ஈராக்கிற்கு கொண்டு சென்றதில் என்ன முக்கியத்துவம்? கமேனியின் மதப் பற்று ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன் மற்றும் பிற ஷியா சமூகங்கள் வரை பரவியிருந்தது. அதனால்தான் நஜாஃப் மற்றும் கர்பலாவில் நடத்தப்பட்ட ஊர்வலங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இது வெறும் ஈரானிய அரசு நடத்திய இறுதிச்சடங்கு மட்டுமல்ல, ஷியா ஒற்றுமையின் நாடு கடந்த தருணம் என்ற உணர்வை ஏற்படுத்தின. ஷியா முஸ்லிம் உலகில் எல்லை கடந்த ஒரு புரட்சிகர சக்தியாகத் தன்னை முன்னிறுத்தும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நோக்கத்தையும் அது வெளிச்சம் போட்டு காட்டியது.

கமேனி புதைக்கப்படவில்லை...
கமேனி இறுதிச் சடங்கில் ஜார்ஜிய அதிபர் மிகைல் கவெலஷ்விலி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரைத் தவிர, வேறு சில உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். எட்டு நாட்டுத் தலைவர்களும் 12 நாடாளுமன்ற சபாநாயகர்களும் கலந்துகொண்டனர். கமேனி இறுதி ஊர்வலம் "சர்வதேச சமூகத்திற்கு ஈரான் ஆட்சியாளர்களின் சக்தியை" பறைசாற்றியுள்ளது. கமேனியின் இறுதிச் சடங்கை, தனது அதிகாரத்தையும் மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும் ஒரு மாபெரும் நிகழ்வாக ஈரான் அரசு மாற்றியுள்ளது. கமேனி புதைக்கப்படவில்லை, ஈரானில் விதைக்கப்பட்டிருக்கிறார்.