Also Watch
Read this

ஈரான், ஈராக் நாட்டில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களுக்கு கமேனியின் உடல் கொண்டு செல்லப்படுவது ஏன்?
தாக்குதலில் உயிரிழப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இந்த நிலையில், அவருடைய 7 நாள் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதனால் மரணம் அடைந்து 4 மாதங்களுக்குப் பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது? பல பகுதிகளுக்கும் அவருடைய உடல் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படுவது ஏன்?

பாதுகாப்பு காரணங்களுக்காக...
வழக்கமாக, இஸ்லாமிய கலாச்சாரத்தில் மறைந்த சில மணி நேரத்திலேயே உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், கமேனியின் உடல் 131 நாள்களுக்குப் பிறகு தற்பொழுது, நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணங்களில், முதன்மையானது தீவிர போர்ச் சூழல் என்று சொல்லப்படுகிறது. பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டார். அப்போது ஈரான் கடும் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகி, போர் உச்சகட்டத்தில் இருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிச்சடங்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மாபெரும் இறுதி ஊர்வலம்
தற்பொழுது, தற்காலிக போர் நிறுத்த சூழலைப் பயன்படுத்தியே இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி ரசாயனங்கள் கொண்டு உடலைப் பதப்படுத்தும் Embalming தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஈரானின் சட்டம் மற்றும் மத நிபுணர்களின் சிறப்பு அனுமதியைப் பெற்று, அவரது உடல் கடந்த 4 மாதங்களாக அதி நவீன Cold Storageல் உறைந்த நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது அமெரிக்கா உடனான போருக்குப் பிறகும் ஈரானிய அரசு மற்றும் இஸ்லாமியப் புரட்சி வலுவாக உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு பறை சாற்றவே இந்த மாபெரும் இறுதி ஊர்வலம் தற்பொழுது நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

முக்கிய 5 நகரங்களுக்கு...
கமேனியின் இறுதி ஊர்வலமானது, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளிலுள்ள முக்கிய 5 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற கிராண்ட் மொசல்லா வழிபாட்டுத் தலத்தில் பொதுமக்கள் மற்றும் உலகத் தலைவர்களின் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட உள்ளது. ஜூலை 6 அன்று டெஹ்ரானில் உள்ள வீதிகளில் ஊர்வலம் நடைபெறுகிறது. அடுத்ததாக, டெஹ்ரானில் இருந்து தெற்கே உள்ள ஷியா முஸ்லிம்களின் புனித நகரான கோமில் உள்ள ஜம்காரன் மசூதிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

இறுதிச் சடங்கு உடன்...
அதற்கடுத்து, ஈராக் நாட்டில் உள்ள ஷியாக்களின் மிக முக்கிய புனித நகரங்களான நஜாஃப் மற்றும் கர்பலாவிற்கு 8ஆம் தேதி கமேனியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. இறுதியாக, கமேனி பிறந்த நகரான மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற Imam Reza Shrine புனித தலத்தில் ஜூலை 9 அன்று இறுதிச் சடங்குகளுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

உயிர்ப்புடன் இருக்கிறது...
அவரது உடல் கொண்டு செல்லப்படும் இந்த கோம், நஜாஃப், கர்பலா, மஷாத் ஆகிய நகரங்கள் ஷியா இஸ்லாமியப் பிரிவினரின் மிக உயரிய புனிதத் தலங்களைக் கொண்ட இடங்கள். அதனாலேயே அவருடைய உடல் இந்த நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, ஈரான் மற்றும் ஈராக் எல்லைகளைத் தாண்டி ஷியா முஸ்லிம்களிடையே தங்களின் ஆன்மீக மற்றும் புரட்சிகர சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைக் காட்டவே இந்த இரு நாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

100 நாடுகளின்...
இவ்வாறு, கமேனி பிறந்த இடமான மஷாத் நகரில், ஈரானின் முக்கியத் தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் இமாம் ரிஸா வளாகத்திலேயே அவருக்கும் இறுதி ஓய்விடம் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்ல கமேனியின் இறுதி நிகழ்வில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட உலகெங்கிலும் இருந்து சுமார் 100 நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகளும் தலைவர்களும் பங்கேற்று உள்ளனர்.

இந்தியா சார்பில்...
இந்தியா - ஈரான் இடையேயான நீண்டகால ராஜதந்திர உறவுகளின் அடிப்படையில், இந்திய அரசு சார்பில் உயர்மட்டக் குழு ஒன்று டெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய அரசின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் Pabitra Margherita மற்றும் பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் Syed Ata Hasnain ஆகியோர் அடங்கிய குழு டெஹ்ரான் சென்று கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது.

பாதுகாப்பு காரணங்களுக்காக...
இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக, அனைத்து மதங்களைச் சேர்ந்த முக்கிய ஆன்மீகத் தலைவர்கள் அடங்கிய குழுவும் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தி உள்ளனர். ஆனால் அயதுல்லா அலி கமேனியின் மகனும் ஈரானின் தற்போதைய உச்ச தலைவருமான மொஜ்தபா கமேனி பாதுகாப்பு காரணங்களுக்காக தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டு உள்ளது.