Also Watch
Read this
By: Manigandan Raja

காலை 9.30 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவை நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்படுகிறது. இக்கோரிக்கையை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் முன்வைக்கிறார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வருவாய் கணக்கில் ரூ.22,436 கோடியே 84 லட்சத்து 19 ஆயிரம், மூலதனக் கணக்கில் ரூ.918 கோடியே 41 லட்சத்து 93 ஆயிரம், கடன் கணக்கில் ரூ.1 கோடி என மொத்தமாக நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.
அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கான மானியக் கோரிக்கை எண் 41 மீதும் விவாதம் நடைபெறுகிறது. இதனை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் முன்வைக்கிறார்.

இத்துறைக்கு வருவாய் கணக்கில் ரூ.8,816 கோடியே 97 லட்சத்து 57 ஆயிரம், மூலதனக் கணக்கில் ரூ.7 ஆயிரம், கடன் கணக்கில் ரூ.1 கோடியே 78 லட்சத்து 82 ஆயிரம் என நிதி கோரப்பட்டுள்ளது.
மேலும், இயற்கைச் சிற்றினங்கள் குறித்த துயர் தணிப்பு – மானியக் கோரிக்கைமீதும் விவாதம் நடைபெறுகிறது. இதற்காக வருவாய் கணக்கில் ரூ.2,713 கோடியே 13 லட்சத்து 64 ஆயிரம் நிதி கோரப்பட்டுள்ளது.
இதனுடன், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம், தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடு பஞ்சாலை நிறுவனம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் 2024–25ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, செயல்திறன் வரவு-செலவுத் திட்டம், மக்கள் சாசனம் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளும் பேரவையில் வைக்கப்பட உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved