Also Watch
Read this
By: Fyrose Banu

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், பைபர் படகுகள் மற்றும் பாறைகள் இருக்கும் பகுதியில் நட்சத்திர ஆமை ஒன்று இருப்பதை மீனவர்கள் கண்டுள்ளனர். பைபர் படகுகள் நிறுத்தப்படும் பகுதியில் மீனவர்கள் வலை பின்னிக் கொண்டிருந்தபோது, பாறைகளுக்கு அருகே ஆமை ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளனர். உடனடியாக காசிமேடு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் ஆமையை பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட ஆமை இந்திய நட்சத்திர ஆமை எனக் கூறப்படுகிறது. கருப்பு நிற ஓட்டில் மஞ்சள் நிற நட்சத்திர வடிவ கோடுகள் இருப்பது இந்த ஆமையின் தனிச்சிறப்பாகும். நட்சத்திர ஆமை கடல் ஆமை அல்ல. இது நிலத்தில் வாழும் ஆமை இனத்தைச் சேர்ந்தது. புல், இலைகள் மற்றும் பிற தாவர உணவுகளை உண்ணும் இந்த ஆமை, பொதுவாக வறண்ட புல்வெளிகள் மற்றும் புதர்க்காடுகள் போன்ற நிலப்பகுதிகளில் காணப்படும்.

கடலோரப் பகுதியான காசிமேட்டில் உள்ள பைபர் படகுகள் மற்றும் பாறைகள் இருக்கும் இடத்திற்கு இந்த நட்சத்திர ஆமை எவ்வாறு வந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய நட்சத்திர ஆமை பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு என்பதால், பொதுமக்கள் இதனை பிடித்து வீட்டில் வளர்ப்பது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமானது. தற்போது ஆமை பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved