Also Watch
Read this
"அரசு மருத்துவமனையில் இருந்து வர்றோம், மெடிக்கல் கேம்ப் நடக்குது," என்று நூதனமாக ரீல் விட்டு, சென்னை அம்பத்தூரில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டி வரும் மர்ம பெண்ணால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். ஆண்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு அசால்ட்டாக கைவரிசை காட்டும் அந்த மர்ம பெண் யார்?

அம்பத்தூரில் அதிர்ச்சி
ஒன்றல்ல, இரண்டல்ல, கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வீடுகளில் நைஸாக புகுந்து, நகை மற்றும் பணத்தை சுருட்டிக்கொண்டு சத்தமில்லாமல் நழுவியிருக்கிறார் மெடிக்கல் கில்லாடிப் பெண். சம்பவம் நடந்து 5 நாட்களாகியும், போலீசுக்கே தண்ணி காட்டிவிட்டு இன்னும் மாயமாகவே வலம் வருகிறார் அந்த மர்மப் பெண்.

சென்னை, அம்பத்தூரை அடுத்த வரதராஜபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள் கோபாலகிருஷ்ணன் - ராஜேஸ்வரி தம்பதி. கோபாலகிருஷ்ணன் வீட்டின் எதிரே பெட்டிக்கடை நடத்தி வர, சம்பவத்தன்று வழக்கம்போல் அவர் கடைக்கு சென்றிருக்கிறார். வீட்டில் இருந்த ராஜேஸ்வரி, துணிகளை உலர வைக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். இதை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு நோட்டமிட்டுள்ளார் அந்தப் பெண்.

ரூ.8 லட்சம் கொள்ளை
வீட்டில் ஆளில்லாத நேரத்தை பயன்படுத்தி, மின்னல் வேகத்தில் உள்ளே புகுந்த அந்த லேடி கில்லாடி, பீரோவை உடைத்து அதிலிருந்த 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை ’லபக்கி’ உள்ளார். பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பிக்க முயன்றபோது, மாடியிலிருந்து கீழே வந்த ராஜேஸ்வரியிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார். யாரும்மா நீ? வீட்டுக்குள்ள என்ன வேலை? என்று ராஜேஸ்வரி மறிக்க, துளியும் பதற்றமில்லாமல், ’நான் கவர்மெண்ட் ஆபீஸர், மெடிக்கல் கேம்ப் நடக்குது, அதான் தகவல் சொல்ல வந்தேன்,’ என்று அசால்ட்டாக ரீல் விட்டுவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். வீட்டிற்குள்ளே போய் பார்த்தபோது தான் 8 லட்சம் ரூபாய் கொள்ளை போன பகீர் உண்மை ராஜேஸ்வரிக்கு தெரியவந்துள்ளது.

20க்கும் மேற்பட்ட வீடுகளில்...
விஷயம் அறிந்து கொதித்தெழுந்த பொதுமக்கள், அந்த பெண்ணை விரட்டிப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களிடம் சிக்காமல் லாவகமாக எஸ்கேப் ஆகியிருக்கிறார். தற்போது, அந்த பெண் நைஸாக நழுவி செல்லும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது ஏதோ ஒரு வீட்டில் நடந்த திருட்டு அல்ல, கடந்த சில நாட்களாகவே இதே வரதராஜபுரம் பகுதியில், மருத்துவ முகாம் நடக்கிறது, என்று கூறி சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளை இந்த மர்மப் பெண் நோட்டமிட்டு, கைவரிசை காட்டியதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் பொதுமக்கள்.

போலீசாருக்கு சவால்
ஆள் இருந்தால் மெடிக்கல் கேம்ப், ஆள் இல்லை என்றால் பீரோவுக்கு ஆப்பு. இதுதான் இந்த கில்லாடி லேடியின் மாஸ்டர் பிளான். சம்பவம் நடந்து 5 நாட்களை கடந்தும், அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வலைவீசித் தேடி வந்தாலும், அந்த பெண் இன்னும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு கானல் நீராகவே இருக்கிறார். இதனால் அம்பத்தூர் போலீசாருக்கு இது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved