Also Watch
Read this
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை, மியான்மரில் கடத்தி வைத்து கொண்டு பணம் கேட்டு குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த கும்பலுக்கு பாடம் புகட்டிய தமிழ்நாடு போலீசார், இளைஞரையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வந்தனர். பணம் கேட்டு மிரட்டிய கும்பல் சிக்கியது எப்படி?

பணம் கேட்டு கடத்தல்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த மூவாநல்லூர் வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் முகேஸ்வரன், கடந்த 2 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கடந்த 8ஆம் தேதி தாய்லாந்து சென்று அங்கிருந்து ஏஜென்ட் மூலம் மியான்மர் சென்ற முகேஸ்வரன், தந்தையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னை கடத்தியதாகவும், 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறினார். மேலும் பணத்தை திருச்சியில் அவர்கள் கூறும் நபர்களிடம் கொடுக்குமாறு தெரிவித்தார்.

வியூகம் வகுத்த போலீசார்
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகையன், உடனே மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து வடுவூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தனி அலுவலராக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தினார். அதன் பின், திருச்சியில் இருப்பவர்களிடம் பணம் கொடுக்க பாதிக்கப்பட்டவர் தரப்பினர் போல் பேசிய போலீசார், பணம் கொடுப்பது போல் கொடுத்து கைது செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

எச்சரித்த போலீசார்
அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்த பின், சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாவாராம் என்பதும், திருச்சி பாலக்கரையில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சாமலாராம் என்பவருக்கும் இதில் தொடர்பு இருந்ததும் அம்பலமானது. பின்னர் மியான்மரில் இருக்கும் கடத்தல்காரர்களிடம் பேசிய போலீசார் முகேஸ்வரனை விடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கைது செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

காவல்துறை அறிவுறுத்தல்
இதையடுத்து அவரை கடத்தல்காரர்கள் விடுத்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்பினார்.

ஏஜென்ட் மூலமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் முறையாக விசாரித்து அதன் பின்னர் செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved