Also Watch
Read this
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம் கூறி இருப்பதாவது;
ஆகஸ்ட் 24, 25ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு கடற்கரையோரம் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இந்த மழைப் பொழிவு நீடிக்கிறது.

கன மழை எச்சரிக்கை
ஆகஸ்ட் 24, 25ஆம் தேதிகளில், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்போது இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

சென்னை, புறநகரில்...
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது. நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகம் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும். கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved