Also Watch
Read this
சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே அனல் பறக்கும் வார்த்தைப் போர் வெடித்தது. 100 நாள் ஆட்சியின் செயல்பாடுகள், கூட்டணி அரசியலின் பின்னணி என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்வைத்த கருத்துக்களுக்கு, திமுக தரப்பில் கோவி.செழியனும், கே.என்.நேருவும் அளித்த பதில்கள் அவையில் கவனத்தை பெற்றன.

தமிழக சட்டப்பேரவையில்...
மானியக் கோரிக்கையின் போது, தவெக அமைச்சரின் அதிரடிப் பேச்சால் கொந்தளித்த திமுக உறுப்பினர்கள், அவையில் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவையில் பேச தொடங்கிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ’வெறும் 100 நாட்கள் மட்டுமே ஆன அரசை பார்த்து அதை செய்தீர்களா? இதை செய்தீர்களா? என்று கேள்வி கேட்கிறீர்கள். ஆனால், 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக என்ன சாதித்தது?’ என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கேள்வி எழுப்பினார். தங்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன், முதலில் அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் சிலையை வையுங்கள் என சாடினார்.

திமுக மீது சாடல்
அத்துடன் நிறுத்தாமல் கூட்டணி அரசியலை கையில் எடுத்த ஆதவ் அர்ஜுனா, கடந்த 10 ஆண்டுகளாக 25 கட்சிக் கூட்டணியை நம்பித் தான் திமுக பிழைப்பு நடத்தியதாகவும், ஆனால், 2026ல் தவெக தனித்து நின்று 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றதாக கூறினார்.

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள் இல்லை என்றால் சென்னையில், 16ல் 14 இடங்களில் தோற்ற திமுக, தமிழ்நாட்டிலேயே 10 இடங்களை கூட தாண்டியிருக்க முடியாது என விளாசினார்.

பூஜ்ஜியத்தில் இருந்து...
ஆதவ் அர்ஜுனாவின் இந்த ஆவேசப் பேச்சால், திமுக உறுப்பினர்கள் கொந்தளித்து போய் அவையில் அமளியில் ஈடுபட்டனர். உடனே களத்தில் குதித்த கோவி.செழியன், 1991ல் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் ஒரே ஒரு இடத்தில் வென்று, பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டு வந்த இயக்கம் திமுக என முழங்கினார்.

நேரு vs செங்கோட்டையன்
அவரைத் தொடர்ந்து மைக்கை பிடித்த கே.என்.நேரு, கூட்டணி வெற்றியை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், தங்கள் கூட்டணியில் வென்றவர்களின் தயவால் தான் நீங்களே ஆட்சி நடத்துகிறீர்கள் என்றும், உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால், கூட்டணி கட்சிகளை வெளியேற்றி விட்டு தனியாக ஆட்சி நடத்துங்கள் பார்ப்போம் என சவால் விடுத்தார்.

திமுகவின் ஆதரவால்தான் மத்தியில் 2 முறை காங்கிரஸ் ஆட்சி அமைத்தது என நேரு பேசிக் கொண்டிருக்கும்போதே, குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், 2004ல் காங்கிரஸ் ஆட்சியில் 11 அமைச்சர் பதவிகளை வாங்கிக்கொண்டு தானே ஆதரவு கொடுத்தீர்கள்? என பாய்ந்தார்.

காங். எம்எல்ஏ பேச்சால்...
இதற்கிடையே காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பட் எழுந்து, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால்தான் 2024ல் திமுகவுக்கு 40க்கு 40 வெற்றி கிடைத்தது. எங்களுக்கான ஆட்சி வரும்பொழுது நாங்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தோம் என்று தவெக-வை ஆதரிக்கும் வகையில் பேச, திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அரசியல் போர்க்களமாக...
உடனே கொதித்தெழுந்த கே.என்.நேரு, யாத்திரை இந்தியா முழுக்க நடந்தது தான், ஆனால் தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரஸை ஜெயிக்க வைத்ததே திமுகதான் என்று சீறினார்.

மொத்தத்தில், நாங்கள் யாருக்கும் அடிமையில்லை என்ற ஆதவ் அர்ஜுனாவின் முழக்கமும், திமுக இல்லாமல் உங்களால் வெல்ல முடியாது என்ற நேருவின் சீற்றமும் சட்டப்பேரவையை ஒரு அரசியல் போர்க்களமாகவே மாற்றிவிட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved