Also Watch
Read this
டெட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க, மத்திய அரசை கேட்டு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம், திமுக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் இன்று...
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானத்தை கொண்டுவந்தார்.
தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;
ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவை போதிக்கும் பணி மட்டும் அல்ல, அது மனித வளத்தை உருவாக்கி சமூகத்தின் எதிர்காலத்தை செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பு. பாடத் திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாக கற்பித்தல், அவர்களது கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்பு, சமூக பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவர்களிடம் உள்ள தனித்துவமான திறமைகளான விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாக பணியாக உள்ளது.

தேர்ச்சி பெற வேண்டும்...
தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின், 2010 ஆகஸ்ட் 23ஆம் தேதியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதகு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக எந்த வித இடையூறும் இன்றி தங்களுடைய பணியை சிறப்பாக ஆற்றிவரும் நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த உத்தரவால், தமிழ்நாட்டில் சுமார் 3.28 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு பெற இயலும், தேர்ச்சி பெறாவிட்டால் பணி இழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சீராய்வு மனு மீதான தீர்ப்பில் பணியில் உள்ள ஆசிரியர்கள் 2028 ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாழ்வாதார உரிமை பாதிப்பு
இந்த நிலையில் சுமார் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வு பெறும் வயதை நெருங்கும் ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வற்புறுத்துவது அவர்களது வாழ்வாதார உரிமையை பாதிக்கும் செயல். எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு நீண்ட கால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.
* தமிழ்நாடு பள்ளிகளில் 23/08/2010க்கு முன்பாக அன்று நடைமுறையில் இருந்த விதிமுறை மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்ட கால பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை சட்டப்பேரவை வலியுறுத்துகிறது

* இதற்கேற்ப இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு 23ல் உரிய சட்டதிருத்தம் மேற்கொண்டு 23/08/2010க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் வழியாக இது தொடர்பான தெளிவான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை உடனடியாக வெளியிடுமாறு ஒன்றிய அரசை பேரவை வலியுறுத்துகிறது.

* மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் நீண்டகாலமாக பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிபலன்கள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு பேரவை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
தனி தீர்மானம் நிறைவேற்றம்
இதனை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved