Also Watch
Read this
பரந்தூர் விமான நிலைய ரத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்க, ’G SQUARE மாப்பிள்ளை தான் காரணம்,’ என அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார். ’எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் கொண்டு வருகிறீர்கள்? என எங்களாலும் கேட்க முடியும்,’ என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்தார்.

தமிழக சட்டப்பேரவையில்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பரந்தூர் விமான நிலையம் மற்றும் விவசாயிகளின் நில உரிமை குறித்து, காரசார விவாதம் நடைபெற்றது.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா;
பரந்தூர் விமான நிலையமா அல்லது விவசாயிகளின் கண்ணீரா என்றால், எங்கள் தலைவர் - முதலமைச்சர், விவசாயிகள் பக்கம்தான் நிற்பார். முதலமைச்சர் கூறியது போல், விமான நிலையத்திற்கான இடம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் தலைவர் எப்போதும் விவசாயிகளுக்காக குரல் கொடுப்பார். டெல்டாவில் பிறந்தவர்கள் நாங்கள் என்று சொல்பவர்கள் இன்று பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

பரந்தூர் மட்டுமல்லாமல் திருவண்ணாமலையில் உள்ள மேல்மாவில் விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டம் போட்டது திமுக அரசு.
தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கியமான காரணமாக ஒற்றைச் சாளர முறை தான் உள்ளது. அதை முதலமைச்சர் உருவாக்குவார். தொழில் முதலீடு வருவதற்கு ஊழல் இல்லாத கட்டமைப்பு தேவை. ஐந்து ஆண்டுகள் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் தயார். உங்களை விட 10 மடங்கு இங்கு பொருளாதாரம் வந்திருக்கும். ஊழல் இல்லாத ஆட்சியை எங்கள் முதலமைச்சர் வழங்குவார்.

எடப்பாடி பழனிசாமி - அதிமுக;
பரந்தூர் விமான நிலையத்திற்காக 5,740 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகக் கூறி, 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு தொகையும் தரப்பட்டுள்ளது என்று கூறப்படுவதால், திட்டம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது விவசாயிகளுக்கு நிலங்களை மீண்டும் கொடுக்கப் போகிறீர்களா?என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

அமைச்சர் நிர்மல்குமார்;
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மொத்தமாக 5,846 ஏக்கர் தேவைப்பட்டது. இதில் பட்டா நிலங்கள் 3,774 ஏக்கரும், 3 போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கரும் இருந்தன. 90% நிலம் கையகப்படுத்தப் படவில்லை; மாறாக 48% அதாவது 1,802 ஏக்கர் நிலங்கள் மட்டும்தான் கையகப்படுத்தப் பட்டுள்ளது. சில கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தப் படவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியதாக தவறான தகவல் கூறப்படுகிறது. ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கிக் குவித்தவர்கள், கருப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதை எதிர்க்கின்றனர்.

தங்கம் தென்னரசு - திமுக;
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொன்னால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என்று நான் கேட்கட்டுமா?.
பல இடங்களில் ஆய்வு செய்த பிறகே பரந்தூர் விமான நிலைய பகுதியை தேர்வு செய்தோம். எந்த இடத்தில் விமான நிலையம் அமைந்தாலும் அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும், அப்போதும் பிரச்சினை ஏற்படுவது இயற்கை. மக்களை இடமாற்றம் செய்யாமல் நிலத்தை முழுமையாகக் கையகப்படுத்த இயலாது. சென்னை விமான நிலையத்தில் எப்படி இரண்டாவது ரன்வே வரும்?

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா;
கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வைத்து பொது மக்களைப் பாதிக்காத வகையில் உரிய மாற்று திட்டங்கள் தொடங்கப்படும். மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது. பரந்தூர் விமான நிலையமாக மாற்றப்பட்டால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.
இவ்வாறு சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved