Also Watch
Read this
6 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரம் குறித்து சட்டசபையில் அனல் பறக்க விவாதம் நடந்த நிலையில் பொறுப்பு அமைச்சர்கள் மக்கள் பணி செய்து கொண்டு இருப்பதாக ஆதவ் அர்ஜூனா தெரிவிக்க, ஒரே நாளில் அத்தனை தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்கள் குறைகளை கேட்டுவிட முடியுமா? என இபிஎஸ் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அவையில் கூச்சல் குழப்பம் தறிகெட்டு செல்வதாக கூறிய சபாநாயகர், இது என்ன பொதுக்கூட்டமா? என தன்பங்குக்கு கோபக்கனல் வீசினார்.

பெரிய ஆதாயம் கிடைத்தால் மட்டுமே
தமிழக சட்டசபையில் இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ ஆஸ்டின், 6 தொகுதிகள் காலியாக உள்ளதால் அங்குள்ள மக்களின் குரல் சட்டமன்றத்தில் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கி வேறு கட்சிக்கு தாவுவது என்பது சாதாரணமாக நடந்துவிட முடியாது, எம்எல்ஏ பதவியைவிட பெரிய ஆதாயம் கிடைத்தால் மட்டுமே செய்ய முடியும் என விவாதத்தை காரசாரமாக முன்வைத்தார்.

விவாதமா? அரசியலா?
அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது சட்டமன்றத்தில் பேசக்கூடாது என சபாநாயகர் கண்டித்தார். ஒரு காட்டை கொளுத்த ஒற்றை தீக்குச்சி போதும் என்பதுபோல ஆஸ்டின் ஆரம்பித்த ஒரு கருத்தால் அவையில் அடுத்தடுத்து விவாத அனல் பற்றி எரிந்தது. 6 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும் பொறுப்பு அமைச்சர்கள் இருப்பதாகவும், மக்கள் பணிகளில் எந்த தொய்வும் இல்லையென கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஆஸ்டின் விவாதம் பக்கம் வராமல் அரசியல் பக்கமே செல்வதாக குற்றம்சாட்டினார்.

உதயநிதி விளக்கம்
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, 6 உறுப்பினர்கள் ஒரு கூட்டத்தொடரில் கூட கலந்துகொள்ளாமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள் என்றுதான் தங்களது உறுப்பினர் பேசினாரே தவிர யாரையும் அவர் குற்றம் சாட்டவில்லை என்றார்.

செங்கோட்டையன் vs இபிஎஸ்
தொடர்ந்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையனும், பொறுப்பு அமைச்சர்கள் 6 தொகுதிகளிலும் நேரில் சென்று மக்கள் குறைகளை கேட்பதாக கூறிவிட்டு கோபத்தில் மைக்கை பட்டென கீழே தட்டிவிட்டார்.
அப்போது குறுக்கிட்ட இபிஎஸ், காலியாக உள்ள அத்தனை தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சரால் ஒரே நாளில் செல்ல முடியுமா? எம்எல்ஏக்களால்தான் செல்ல முடியும் எனக் கூறிவிட்டு அவரும் மைக்கை சடாரென சாய்த்துவிட்டார்.
காலியாக உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் எனக்கூறிய செங்கோட்டையன் அந்த தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம், அதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை என தெரிவித்தார்.

இபிஎஸ் டென்ஷன்
இதனால், டென்ஷனான இபிஎஸ் விவாதம் வேறுதிசையில் சென்று கொண்டிருப்பதாக ஆட்காட்டி விரலை நீட்டிபேசியதோடு ஹைபிட்சில் பேசினார். இடையில் குதிரைபேரம் என்ற வார்த்தையும் அதிமுக தரப்பில் இருந்து ஒலித்தது.
அப்போது, எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என செங்கோட்டையன் கேள்வி எழுப்ப, அருண் மனு தள்ளுபடி செய்யப்பட்டது யாரும் வாபஸ் வாங்கவில்லை என இபிஎஸ் ஆவேசமாக பதிலளித்தார்.

இது என்ன பொதுக்கூட்டமா?
அவருக்கு ஆதரவாக சில அதிமுக எம்எல்ஏக்களும் எழுந்து நின்று கூச்சல் குழப்பத்தில் ஈடுபட, கோபமான சபாநாயகர் இது என்ன பொதுக்கூட்டமா? ஏன் இத்தனைபேர் எழுந்து நிற்கிறீர்கள்? இபிஎஸ்சுக்கு பதில் உங்களை பேச வைக்கவா? என கேள்வி எழுப்ப, பேச விடவில்லையென்றால் எழுந்துதான் நிற்போம் என இபிஎஸ் கத்தினார்.
6 எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தை ஆரம்பித்து வைத்த ஆஸ்டின் அமைதியானாலும் அவை முன்னவருக்கும், அதிமுகவினருக்கும் வார்த்தைப்போர் வெடித்து சபாநாயகரின் எச்சரிக்கைக்கு பிறகுதான் அடங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved