Also Watch
Read this
பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாவிட்டால், விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நிலத்தை ஒப்படைக்க வேண்டும்
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறி இருப்பதாவது;
பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது? என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், ’மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம்,’ என்று கூறி உள்ளார்.


நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது. விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

ஒருவருக்கொருவர் புகழ் பாடுகின்றனர்
சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக பேசாமல் ஒருவருக்கு ஒருவர் தங்கள் கட்சியின் புகழை பாடுகின்றனர். மக்கள் பிரச்சனைகளைப் பேசாமல் நேரத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது. மானிய கோரிக்கை விவாதங்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் நேரம் ஒதுக்குவதில்லை. அவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை மக்களை நேரடியாக சந்தித்து உரையாடும் வகையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட இருப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். மக்களின் அத்தியாவசிய பிரச்சனை மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் பிரச்சனைகளை அறிந்து போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved