Also Watch
Read this
வறண்ட நிலமும், வாடிய முகங்களுமாய் 80 நாட்களாக காத்துக்கிடந்த காவிரிப்படுகை விவசாயிகளின் நெஞ்சில் பாலை வார்க்கும் விதமாக, வரலாற்று சிறப்புமிக்க மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். கழனிகள் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, காவிரித் தாயை இருகரம் கூப்பி பக்தியோடு வணங்கி சம்பா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்துள்ளார் முதல்வர்.

மேட்டூர் அணை திறப்பு
காவிரிப்படுகை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் காத்திருப்புக்கும், பதைபதைப்புக்கும் விடை கிடைத்திருக்கிறது. குறுவைதான் கைவிட்டுப்போனது, சம்பாவாவது காக்குமா? என்ற ஏக்கத்தோடு வானத்தை பார்த்து நின்ற விவசாயிகளின் முகத்தில் சிறு நம்பிக்கையை விதைத்திருக்கிறது மேட்டூர் அணை திறப்பு.

வழக்கமாக ஜூன் 12ஆ தேதி தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த தேதியில் திறக்கப்பட்டால் தான் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செழிக்கும். ஆனால், நடப்பாண்டு கர்நாடக அரசு மழை பொய்த்ததாக கூறி, தண்ணீரை திறக்க மறுத்ததால், 80 நாட்கள் காலதாமதமாக அணை திறக்கப்பட்டிருக்கிறது.

93 ஆண்டுகால மேட்டூர் வரலாற்றில், அணை செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படுவது இது 4ஆவது முறை. நீர்மட்டம் 90 அடியை எட்டினால் மட்டுமே அணை திறக்கப்படும் என்ற நிலையில், இயற்கை அன்னையின் கருணையால் கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த மழையும், அதை தொடர்ந்து திறந்துவிட்ட உபரி நீரும்தான் மேட்டூரை 90 அடிக்கு கொண்டு வந்திருக்கிறது.

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
கர்நாடகாவின் பிடிவாதத்தால், நடப்பாண்டு குறுவை சாகுபடி பாதியாக குறைந்து போக, பம்புசெட் வைத்திருந்த விவசாயிகள் மட்டுமே தப்பினார்கள். இந்த சூழலில்தான், சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. அணை திறப்பு நிகழ்விற்காக சேலம் வந்திறங்கிய முதலமைச்சர் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டு, வேட்டி சட்டை அணிந்து வந்த முதல்வரை, தவெக தொண்டர்களும், பொதுமக்களும் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர்.

வழிநெடுக பிரம்மாண்ட ஏற்பாடு
விமான நிலையத்திலிருந்து மேட்டூர் வரையிலான சாலை பயணம், ஒரு திருவிழா போலவே கோலமாகவே மாறியிருந்தது. வழிநெடுக பிரம்மாண்ட ஏற்பாடுகள், மரியாதை, மலர் தூவல் என தொண்டர்கள் காட்டிய அன்பால் நெகிழ்ந்துபோனார் முதலமைச்சர் விஜய்.

தளபதி தளபதி என முழக்கமிட்ட மக்கள் வெள்ளத்தை பார்த்து முதல்வர் வாகனத்தில் இருந்தபடியே புன்னகையோடு கையசைத்து, அவர்களின் உற்சாகத்திற்கு ஈடுகொடுத்தபடியே மேட்டூர் அணைப் பகுதியை சென்றடைந்தார்.

விவசாயிகளின் சார்பாக பிரார்த்தனை
முதலில் மேட்டூர் அணையின் வரலாற்றை குறிக்கும் புகைப்பட கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர், காவிரித் தாயை இருகரம் கூப்பி வணங்கியவர், பொத்தானை அழுத்தி அணை மதகுகளை திறந்து வைத்தார். சீறிப்பாய்ந்த தண்ணீரில் பூக்களையும், நெல்மணிகளையும் தூவி, கழனிகள் தோறும் விளைச்சலை அள்ளித்தர வேண்டும் என்று விவசாயிகளின் சார்பாக பிரார்த்தனை செய்தார்.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால்...
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.

சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன பரப்பை கொண்ட டெல்டா பகுதிக்கு, 330 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. குறிப்பாக, நெற்களஞ்சியங்களான தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்கள் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் நீரை மட்டுமே முழுமையாக நம்பியுள்ளன.

இந்த சூழலில்தான் அடுத்த 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முழுமையான சம்பா சாகுபடிக்கு குறைந்தது 130 நாட்களாவது தண்ணீர் தேவை என்று கணக்கிடுகிறார்கள் விவசாயிகள். பயிரின் இடைப்பட்ட காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், ஒட்டுமொத்த உழைப்பும் கருகிவிடும் அபாயமும் உள்ளது.

வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா?
இந்த சூழலில், கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் திறந்தால் மட்டுமே சம்பா முழுமையாக செழிக்கும். இல்லையென்றால் மீதமுள்ள நாட்களின் தண்ணீர் தேவையை ஈடுகட்ட, வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா? என்பதே டெல்டா விவசாயிகளின் தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved