Also Watch
Read this
நாகர்கோவில் அருகே மூதாட்டியை அடித்துக் கீழே தள்ளி, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு, தற்கொ*போல் செட்டப் செய்த கட்டிட தொழிலாளியையும், அவரது சகோதரரையும் சம்பவம் நடந்த 6 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்தனர். மூதாட்டியை சகோதரர்கள் கொ* செய்தது ஏன்? பின்னணி என்ன?

77 வயதான மூதாட்டி
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் 77 வயது மூதாட்டி சின்னம்மாள். இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த மூதாட்டி தனியாக வாழ்ந்து வந்தார். அரிசி வியாபாரம் செய்து வந்த மூதாட்டியின் மாட்டுப்பண்ணையில் செட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த விருதுநகரை சேர்ந்த 33 வயது இளைஞர் வேல்ராஜ் வேலை செய்தார்.

அடிக்கடி கடன் கேட்டு தொல்லை
இந்நிலையில், மூதாட்டி மாட்டுப்பண்ணையை மூடியதால் கட்டிட வேலைக்கு சென்ற வேல்ராஜ் அவ்வப்போது அரிசி மூட்டைகளை மட்டும் தூக்கி கொடுக்கும் உதவிகளை செய்துள்ளார். இடையிடையே கடனாக பணம் கேட்டும் மூதாட்டியை நச்சரித்துள்ளார். சிறிய தொகையாக இருந்தால் கொடுக்கும் மூதாட்டி, பெரிய தொகையாக இருந்தால் இல்லை என கூறியதாக தெரிகிறது. அப்படிதான் சம்பவத்தன்றும் பணம் கொடுக்க மறுத்ததாகவும், ஆத்திரத்தில் மூதாட்டியை வேல்ராஜ் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

போலீசாருக்கு தகவல்
இதில், தலையில் அடிபட்டு மூதாட்டி மயங்கி கீழே விழ, இனி உயிரோடு விட்டால் நமக்கு தான் ஆபத்து என்றெண்ணிய வேல்ராஜ் மண்ணெண்ணையை ஊற்றி மூதாட்டியை எரித்துவிட்டு, தற்கொ* செய்து கொண்டதாக ஜோடிக்க முயன்றுள்ளார். இதனிடையே, வேல்ராஜ் கொடுத்த தகவலின்பேரில் அங்கு அவரது சகோதரரும் வர இருவரும் சேர்ந்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 15 சவரன் நகைகள், பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சிட்டாக பறந்தனர். துணி மற்றும் தலைமுடி எரிந்து கருகுவதுபோன்ற நாற்றத்தை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு அவரது மகள்கள் மற்றும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

ஆறு மணி நேரத்தில் கைது
அடுத்து அங்கு வந்த போலீசார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஹெல்மெட் அணிந்தபடி ஒருவர் வந்து செல்வது பதிவாகி இருந்தது. அந்த நபர் மூதாட்டியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் வேல்ராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது.

செட்டிப்பட்டியில் உள்ள வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்த வேல்ராஜ் மற்றும் அவரது சகோதரர் அரவிந்த் ஆகிய இருவரையும் கொத்தாக கைது செய்தனர். சம்பவம் நடந்த 6 மணி நேரத்திலேயே இருவரும் சிக்கி உள்ள நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் சதாம்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved