Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற இக்கோயிலின் பிரதான தெய்வமாக அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் இருக்கிறார்.
இங்கு சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இன்று தொடங்கிய சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்று விழாவை
முன்னிட்டு காலையில் கொடிமரத்திற்கு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு முன்பு எழுந்தருளிய அங்குச தேவருக்கு சந்தனம், பால், தயிர், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கொடி படத்திற்கு தீபாராதனையும் பூக்களால் அர்ச்சனை அபிஷேகமும் நடைபெற்று, பின்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெள்ளி மூஷிக வாகனம் வரைந்த கொடி ஏற்றப்பட்டது. முதல் நாள் விழாவான இன்று இரவு 9 மணி அளவில் திருநாள் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு சிவாச்சாரியார்கள் பன்முக தீபாராதனை நிகழ்ச்சி நடத்தினர் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக தீபாரதனையும் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து முதல் நாள் திருவிழாவினை இன்று மூஞ்சூர் வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடிகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து விழாவின் இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை ஒவ்வொரு நாளும் காலையில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவதும், இரவில் சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில்வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவதும் நடைபெறும்.
திருவீதி விழாவில் ஒவ்வொரு நாளும் திருமறை பாராயணமும், திருமுறை பாராயணமும் பாடப்படும். விழாவின் ஆறாம் நாளான வருகின்ற 10ம் தேதி மாலை 5 மணி அளவில் கஜமுக சூரசம்கார நிகழ்ச்சியும்,13ஆம் தேதி மாலையில் சதுர்த்தி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் காட்சிதரும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சதுர்த்தி
விழாவான 14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் திருக்குளத்தில் சதுர்த்தித் தீர்த்தவாரி நடைபெறும். பின்பு மதியம் விநாயகருக்கு முக்குறுணி மோதகம் படையல் இடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாட்டினை நடப்பு காரியக்காரர்கள் கோனாபட்டு அரு.ராமசாமி, அரிமளம் நா. கண்ணன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved