இந்தியாவின் முதல்
ஜியோ-இமேஜிங் செயற்கைகோள்
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் மற்றொரு வெற்றியை மட்டுமல்லாமல், இஸ்ரோவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் பதிவு செய்துள்ளது.
- 2,367 கிலோ எடையுள்ள EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதன் மூலம், ஜிஎஸ்எல்வி எம்கே-II ராக்கெட்டின் 25 ஆண்டு வரலாற்றில் அதிக எடையுள்ள பேலோடைச் சுமந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளின் சிறப்பு என்ன? பொதுமக்களுக்கு எப்படி பயன்படும்?

ராக்கெட்டை மாற்றாமல்
பாதையை மாற்றிய இஸ்ரோ
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.53 மணிக்கு ஜிஎஸ்எல்வி-எஃப்17 விண்ணில் பாய்ந்தபோது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பதற்றமும் எதிர்பார்ப்பும் கலந்த சூழல் நிலவியது. காரணம், இந்தப் பயணத்தின் முக்கியமான கட்டமாக இருந்தது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் அப்பர் ஸ்டேஜ்.
- கிரையோஜெனிக் இயந்திரத்தின் செயல்பாடு வெற்றிகரமாக இருப்பதை ஒவ்வொரு அறிவிப்பும் உறுதி செய்தபோது, கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் கைதட்டி மகிழ்ந்தனர்.
- ஏவுதலுக்கு சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, 2,367 கிலோ எடையுள்ள இஓஎஸ்-05 செயற்கைக்கோள் திட்டமிட்டதைவிட சிறப்பான சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. இது வெறும் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நிகழ்வு அல்ல. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் திறன் தொடர்ந்து மேம்பட்டு வருவதற்கான நேரடி நிரூபணமாகவும் அமைந்தது.
- 2001-ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தில் ஜிஎஸ்எல்வி 1,536 கிலோ எடையுள்ள பேலோட்டைச் சுமந்தது. தற்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த ராக்கெட் 2,367 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இது சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமான பேலோட் திறன் முன்னேற்றத்தைக் குறிக்கிறது
புவியை தொடர்ந்து கண்காணிக்கும் இஸ்ரோவின் கண்!
- இஓஎஸ்-05-ன் உண்மையான முக்கியத்துவம் அதன் எடையில் இல்லை; அது எந்த சுற்றுப்பாதையில் இயங்கப் போகிறது என்பதில்தான் உள்ளது. புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள் பூமியின் சுழற்சியுடன் ஒத்திசைந்து செயல்படுவதால், பூமியின் ஒரே பகுதியை தொடர்ந்து கண்காணிக்க முடியும். அதாவது, இந்தியாவுக்கு ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் திறன் கிடைக்கிறது.
- எல்லைப் பகுதிகள், கடல்சார் பகுதிகள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் வேகமாக மாறக்கூடிய புவியியல் சூழல்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் உருவாகிறது. குறிப்பாக இந்தியாவின் நீண்ட கடற்கரை மற்றும் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் அதிகரித்து வரும் கடல்சார் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் இத்தகைய தொடர்ச்சியான புவி கண்காணிப்பு திறன் முக்கியம்.
- இதன் மூலம் இந்தியாவின் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு திறன் மேலும் வலுப்பெறும்.

இஓஎஸ்-05 செயற்க்கோளில் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் இமேஜிங் கருவிகள் இடம்பெற்றுள்ளன.
- இதன் மூலம் மனிதக் கண்களுக்குத் தெரியாத அல்லது சாதாரண புகைப்படங்களில் எளிதில் கண்டறிய முடியாத பல்வேறு தகவல்களைப் பூமியின் மேற்பரப்பிலிருந்து சேகரிக்க முடியும். வேளாண்மையில் பயிர்களின் நிலை, நீர்ப்பற்றாக்குறை, நோய் தாக்கம் போன்றவற்றைக் கண்காணிக்க முடியும்.
- பேரிடர் மேலாண்மையில் வெள்ளம், காட்டுத்தீ, நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளின் பரவலை விரைவாகக் கண்காணிக்க முடியும். சுற்றுச்சூழல் துறையில் நிலப்பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், நீர்நிலைகளின் நிலை, காடுகளின் மாற்றம் போன்றவற்றை ஆய்வு செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட பகுதியை தொடர்ந்து கண்காணிக்கும் திறனுக்கு வேறொரு முக்கியத்துவமும் உண்டு.

விண்ணில் ஒரு செயற்கைக்கோள்; தரையில் பல பயன்பாடுகள்
- ஒரு விவசாயியின் வயலில் ஏற்படும் மாற்றத்தை முன்கூட்டியே கண்டறிவதிலிருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை விரைவாக மதிப்பிடுவது வரை; கடலில் சந்தேகத்திற்கிடமான கப்பல் இயக்கத்தைக் கண்காணிப்பதிலிருந்து, நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை தொடர்ந்து கண்காணிப்பது வரை — ஒரு செயற்கைக்கோளின் தரவு பல்வேறு வடிவங்களில் பயன்பட முடியும். வானில் இப்போது ஒரு புதிய 'கண்' நிலைபெற்றுள்ளது.
- அந்தக் கண் எவ்வளவு துல்லியமாகப் பார்க்கிறது என்பதைக் காட்டிலும், அது பார்க்கும் தகவலை இந்தியா எவ்வளவு வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்தப்போகிறது என்பதே அடுத்த பெரிய கேள்வியாக இருக்கிறது.