Also Watch
Read this
தேடப்படும் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கைலாசாவின் தூதரக முகவரியை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளார். இத்தனை காலமும் நீங்கள் துன்புறுத்தப்பட்டது போதும், நல்ல நேரம் பிறந்துவிட்டது என அருளாசி வழங்கியபடியே நித்தி, வீடியோவில் பேசி உள்ள நிலையில் கைலாசா முகவரியை குறித்துக்கொண்ட இளைஞர்கள் அங்கு செல்வதற்காக ஆர்வமுடன் தயாராகி கொண்டிருக்கிறார்களாம்.

மனதை புரிந்து கொண்ட...
பிசினஸ்மேன்களாக துடிக்கும் இளைஞர்கள் நித்தியின், "என் சீடர்கள் வேலைக்கு செல்வதா?," என்ற வீடியோவை பார்த்தால் போதும் உத்வேகம் ஊற்றுபோல கொட்டும்.
அதேபோல், ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியர்கள் வகுப்பெடுக்க இருக்கும்போது அத்தனை பாடத்தையும் ஒரே மாணவன் படிக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பும் நித்தியின் வீடியோவை பார்க்கும் மாணவ-மாணவிகள் என்ன மனுஷன்யா? நம் மனதை புரிந்துகொண்ட ஒரே நாயகன் என மெச்சுவதுண்டு...

அனைவருக்குமே நித்தி பரிட்சயம்
அவரது ஆன்மீக சொற்பொழிவு, ஆங்கில புலமை, தனக்கே உரிய சிரிப்புடன் ’வச்சான் பாரு ஆப்பு’ உள்ளிட்ட டயலாக்குடன் நகைச்சுவை வீடியோக்கள் ஆகியவை தற்போதும் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன. இப்படி, பொட்டு பொடுசுகள் முதல் வெற்றிலை மெல்லும் பெருசுகள் வரை அனைவருக்குமே நித்தி பரிட்சயம்தான். தனி அறிமுகமெல்லாம் தேவையில்லை.

கைலாசா என்றொரு...
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து அங்குள்ள கிரிவலப்பாதையில் காவி உடையில் சுற்றிய ஒரு சாதாரண சாமியாரான நித்தியானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோ, சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை, பெண் பக்தர்களை வசியம் செய்து வெளிநாட்டிற்கு அழைத்து செல்லுதல், ஆட்கடத்தல், நில ஆக்கிரமிப்பு, கடத்தல், மோசடி என தாறுமாறான கிரைம் ரேட்டை தன்வசம் வைத்திருந்த நித்தி மீது கர்நாடகா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவானது. ஆனாலும், நாட்டைவிட்டே ஓடிய அவர் கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கியதாக தைரியமாக அறிவித்தார்.

எங்கே இருக்கிறது கைலாசா?
தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து காவல்துறை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடிக்கொண்டிருக்க, கிராஃபிக்ஸ் ஒளி பளிச் பளிச் என மின்னும்படி கூலாக வீடியோவில் அருளாசி வழங்கிய நித்தி, தான் உருவாக்கிய நாட்டுக்கென தனிக் கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டு, நாணயம், ஸ்டாம்ப் ஆகியவற்றை அடுத்தடுத்து அறிவித்தார். கைலாசாவில் கால் வைக்க வேண்டும் என்பதற்காக உலக வரைபடத்தை ஒட்டுமொத்த இளைஞர்களும், ஆன்மீகவாதிகளும் துலாவி கொண்டிருக்க, UNITED STATES OF KAILASA ஆஸ்திரேலியா அருகே இருப்பதாக கூறிய அவரது சிஷ்யைகள் கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபையில் அங்கீகாரம் இருப்பதாகவும் கூறினர்.

வந்தார் நித்தி...
ஆள் தலைமறைவாக இருந்தாலும் ஆக்டிவ் மோடிலேயேதான் இருந்தார் நித்தி. திடீரென அவரது அருளாசி வீடியோக்கள் விடுமுறையில் இருக்க, கோமா நிலைக்கு சென்றுவிட்டார், மரணமடைந்து விட்டார் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவியது. ஆனால், வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற CAPTION உடன் KGF BGM ஒலிக்க, தனக்கே உரிய சிரிப்புடன் வீடியோவில் வந்த நித்தி, ஆயிரம் வருடங்கள் உயிரோடு இருப்பேன் எனக்கூறி ஆன்மீகவாதிகளை ஆறுதல்படுத்தினார்.

புதுச்சேரிக்கு வருகை?
இந்நிலையில் அண்மைக்காலமாக, அவரது வீடியோக்கள் உலா வராததால் நித்தி ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக மீண்டும் தகவல் பரவியது. ஆனால், புதுச்சேரி ஏம்பலத்தில் உள்ள தியான பீடத்திற்கு விரைவில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் பங்கேற்க நித்தியானந்தா வருகை தர உள்ளதாகவும், அதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைலாசா நிர்வாகிகள் எனக்கூறி சிலர் கோரிக்கை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

நல்ல நேரம் பிறந்துவிட்டது
இந்நிலையில், கழுத்தில் மயில் இறகால் ஆன மாலை, கையில் ஞான முத்திரை, வழக்கம்போல கிராஃபிக்ஸ் பிரகாசம் என வீடியோவில் என்ட்ரி கொடுத்துள்ள நித்தியானந்தா, கைலாசாவின் தூதரக முகவரியையும் வெளியிட்டு மேலும் பரபரப்பை கூட்டி உள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்கா அருகே அட்லாண்டிக் பெருங்கடலோரம் கினி பிசாவ் என்ற இடத்தில் கைலாசா இருப்பதாகவும், அங்கு வர விரும்புவோர் அதற்கான புகலிடப் பணிகளில் ஈடுபடுமாறும் கூறி உள்ள நித்தி, சமூக, கலாச்சார, பொருளாதார, மன-உடல் ரீதியாகவும் நீங்கள் துன்புறுத்தப்பட்டது போதும், நல்லநேரம் பிறந்துவிட்டது என பேசி உள்ளார்.

வீடியோவில் வித்தை...
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடுகளில் ஒன்றுதான் கினி பிசாவ். இன்னொரு நாட்டை தனது கைலாசா நாட்டின் தூதரகமாக நித்தி அறிவித்துள்ளது ஒருபுறம் விவாத பொருளாக மாறி உள்ள நிலையில்

மறுபுறம் ஆண்டுக்கணக்கில் வீடியோவிலேயே வித்தை காட்டிக் கொண்டிருக்கும் நித்தியை இன்னும் பிடிக்க முடியவில்லையே என காவல்துறையும் முழித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved