Also Watch
Read this
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பட்டியலின மக்களின் விநாயகர் ஊர்வலகத்துக்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பினரும் போட்டிக்கு போட்டியாக சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து தலையிட்ட போலீசார், ஆராவாரம் இல்லாமல் விநாயகர் ஊர்வலத்தை நடத்தினர்.

விநாயகர் சதுர்த்தி...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இரு வேறு சமூதாய மக்கள் தனித்தனி பகுதியில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒரே மெயின் ரோட்டின் பக்கவாட்டுகளில் குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், ஊருக்கு முன்புறம் ஒரு சமூகத்தினரும், பின் புறம் பட்டியலின சமூகத்தினரும் குடியிருக்கின்றனர். இந்நிலையில், இந்த மெயின் ரோடு வழியாக பட்டியலின மக்கள் செல்வதால் மற்றொரு சமூகத்தை சேர்ந்த மக்களுடன் பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

முதன்முறையாக பிள்ளையார்...
நிலைமை இப்படி இருக்க, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள், முதல்முறையாக பிள்ளையார் சிலையை கடலூரிலிருந்து ஞாயிற்று கிழமை வாங்கி வந்து விநாயகர் சதுர்த்தி நன்னாளில் ஊர்வலம் செல்ல முடிவெடுத்தனர். இதன்படி ஊர்வலமாக பிள்ளையாரை கொண்டு செல்கையில் மற்றொரு சமுதாய மக்கள் முட்டுக்கட்டை போட்டதால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பட்டியலின மக்கள் விநாயகர் சிலையை சாலையில் வைத்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறை பேச்சுவார்த்தை
பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்பை தாண்டியே சுடுகாடு செல்ல வேண்டுமென்பதால் அவ்வழியாக அனுமதிக்க மாட்டோம் என மற்றொரு சமூகத்தினரிடம் சீறினர். பதிலுக்கு மற்றொரு சமூக மக்களும், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வரவிட மாட்டோம் என கொதித்தனர். இந்நிலையில், ஜாதி கலவரம் ஏற்பட்டு விடக் கூடாது என போலீசார் தலையிட்டு இருதரப்பினருமுடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைதியாக பேரணி
இந்த மெயின் ரோட்டில் செல்லாவிட்டால் ஊரை சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்பதால் இவ்வழியிலேயே ஊர்வலத்துக்கு அனுமதிக்க பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, டிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் அதிரடி விரைவு படை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காவலர்கள் களமிறக்கப்பட்டனர். முன்பக்கமும், பின்பக்கமும் காவலர்கள் லத்தி, தடுப்புகளுடன் புடைசூழ, தாரை தப்பாட்டம் உள்ளிட்ட எந்த ஆரவாரம் இல்லாமல் விநாயகர் சிலையின் அமைதி ஊர்வலம் நடந்து முடிந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களை விட பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்ட காவலர்களே அதிகமாக இருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved