Also Watch
Read this
விசிக தலைவர் திருமாவளவன் பேச்சுக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பதிலடி தந்துள்ளார்.

திமுக கூட்டணியில்...
இதுதொடர்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி இருப்பதாவது;
‘திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் கொடுத்து விட்டார்கள், அதனால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்’ என்று திருமாவளவன் சொல்கிறார் என்றால், இதே திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோ ஆகியோர் 2016ல் ‘மக்கள் நல கூட்டணி’ தொடங்கினார்கள். இதே அலுவலகத்தில் கேப்டனைச் சந்தித்து, ‘இந்த கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்க வேண்டும், நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர்,’ என்று கூறியவரும் திருமாவளவன் தான். வார்த்தைகள் என்றும் மாறாது, வரலாறும் மாறாது. கேப்டனை முதலமைச்சர் வேட்பாளராகவே ஏற்றுக் கொண்டவர். அன்று மட்டும் எப்படி ஏற்றுக்கொண்டார்? இன்று 10 தொகுதிகள் ஒதுக்கியதால், வெளியே போகிறோம் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அழகாக கையாண்டவர்...
சேலத்தில் ஒரு கூட்டத்தில், திருமாவளவன் பேசியபோது நான் எழுந்திருக்கவில்லை என்று சர்ச்சையைக் கிளப்ப பார்த்தார்கள். அவர் பேசிக் கொண்டிருந்தபோது நான் இயல்பாகத்தான் இருந்தேன், இதையும் சர்ச்சையாக்க முயன்றார்கள். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவ்வளவோ திட்டங்கள் நடந்தன. ஆனால், அதை மிக அழகாகக் கையாண்டவர் திருமாவளவன். ஏனென்றால், பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அவர் இருந்தார். அவர் சொன்ன வார்த்தைகளை நான் என்றுமே மறக்க மாட்டேன்.

என்ன சொன்னார் திருமாவளவன்?
‘சகோதரி பிரேமலதா அமர்ந்திருந்தது எந்த வகையிலும் தவறில்லை. அன்று முதலமைச்சராக இருந்த கூட்டணித் தலைவர் ஸ்டாலின் இருக்கும்போது, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியது அவர்தான், நான் இல்லை. இருந்தாலும் நான் முன்கூட்டியே அறிவித்தது தவறுதான். அவர் இயல்பாகத் தான் இருந்தார். இதை நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறு. அவர் எப்போதும் எனது சகோதரி தான்,’ என்று அவ்வளவு அழகாக, தெளிவாக ஒரு பதில் சொன்னார். என்னுடைய விருத்தாச்சலம் தொகுதிக்கு அவர் வந்தபோதும் நான் அவருக்கு நன்றி சொன்னேன்.

அமைச்சர் பதவி கிடைத்ததால்...
இன்று அவரது நிலைப்பாடு மாறியதாலும், அவர்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்ததாலும், வேறு கூட்டணிக்குப் போயிருக்கிறார், இதுதான் உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. இன்று கம்யூனிஸ்டுகளும் கூடவே இருக்கிறார்கள். ‘வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம், எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம்,’ என்கிறார்களே? அதை நீங்கள் சொல்ல வேண்டியதுதானே? அதுதானே உண்மை? எதற்காக வேறு கூட்டணிக்குப் போகிறீர்கள்?

எதற்கு தேமுதிகவை இழுக்குறீர்கள்?
நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவர் அமைச்சர் என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள்? என்று நான் கேட்கிறேன். அதை முடிவெடுக்க வேண்டியது திமுகவும் அதன் தலைமையும் தான். அப்படிப் பார்த்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை கூடுதல் இடமாகவே திமுக தந்தது. அதை நாங்கள் கேட்க முடியுமா? நாங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை?

குப்புற விழுந்தாலும்...
வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிக மிகத் தவறான செயல். அதை திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். இனிமேலும் அதுபற்றி அவர் பேச மாட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் அதைப் பற்றிப் பேசினால், ‘குப்புற விழுந்தும் என் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகிவிடும்.
உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது, நீங்கள் போயிருக்கிறீர்கள். இதைப் பற்றி நாங்கள் ஏதாவது சொன்னோமா?

‘அமைச்சர் பதவி கிடைத்தது, அதனால் போனோம்’
அனைத்துக் கட்சிகளும் இருக்கும்போது, தேமுதிக மீது மட்டும் ஏன் எல்லோருக்கும் காழ்ப்புணர்ச்சி? தேமுதிகவைப் பார்த்தால் ஏன் பயம் என்று கேட்கிறேன். எங்களுக்கு 10 தொகுதிகள் கொடுத்தால் என்ன, 20 தொகுதிகள் கொடுத்தால் உங்களுக்கு என்ன? அது கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவு. அதைக் கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
‘அதனால்தான் கூட்டணியை விட்டுச் சென்றோம்’ என்று சொன்னால், அது உண்மைக்கு புறம்பான பதில் என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும். எனவே, ‘அமைச்சர் பதவி கிடைத்தது, அதனால் போனோம்’ என்பதுதான் உண்மை. அதை மாற்றிப் பதில் சொன்னால், அது எப்படிப்பட்ட பொய் என்பது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகப் புரியும்.
இவ்வாறு பிரேமலதா கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved