Also Watch
Read this
வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுப்பதாக கூறி, வட்டாட்சியர் பெயரை பயன்படுத்தி மூன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

வண்டல் மண் அள்ள...
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே மடப்புரம் இந்திரா நகரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மருத்தூர் கிராமத்தில் உள்ள குளத்தில் வண்டல் மண்ணை அள்ளுவதற்கான அனுமதி கேட்டு கிராம உதவியாளர் நல்ல முகமதுவை நாடியுள்ளார்.

இந்நிலையில், அங்கு மண் அள்ள வேண்டுமென்றால் வட்டாட்சியரை பலமாக கவனிக்க வேண்டுமென நல்ல முகமது டிமெண்ட் செய்து, பணத்தை கறந்ததாக சொல்லப்படுகிறது. இதன்படி வட்டாட்சியர் ரவிச்சந்திரனின் பெயரை தவறாக பயன்படுத்தி நாளொன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் என மூன்றரை லட்சம் ரூபாயை பெற்று தனது கல்லாவில் நல்ல முகமது போட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

வட்டாட்சியர் நேரில் விசாரணை
இதனிடையே குளத்தில் வண்டல் மண் கொள்ளை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த வட்டாட்சியர் விசாரணை செய்துள்ளார். அதில், தனக்கு தெரியாமலேயே தனது பெயரை வைத்து நல்ல முகமது கையாடல் செய்தது தெரிய வந்த நிலையில் வட்டாட்சியரை கிறுகிறுக்க வைத்ததாக சொல்லப்படுகிறது.

பணம் கேட்டால் மிரட்டல்
இதனையடுத்து, தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கிராம உதவியாளர் நல்ல முகமதுவை, பாலாஜி நெருக்கிய நிலையில், அந்த மோசடி விவகாரம் குறித்து வட்டாட்சியர் உயரதிகாரிகளிடம் புகார் கடிதத்தை பறக்க விட்டதாக சொல்லப்படுகிறது.

அந்த ஆத்திரத்தில், பாலாஜி செல்போனுக்கு தொடர்பு கொண்ட மோசடிக்காரர் நல்ல முகமது, காது கூசும் வார்த்தைகளால் வறுத்தெடுத்திருக்கிறார். அதோடு, ஜாதியின் பெயரை கூறி மட்டம் தட்டி பேசியதோடு, மட்டுமில்லாமல் மிரட்டலும் விடுத்தார்.

கைது, சிறையில் அடைப்பு
இந்த ஆடியோவை வைத்து செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், நல்ல முகமதுவை போலீசார் தட்டி தூக்கி பொறையூர் சிறையில் அடைத்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved