Also Watch
Read this
வடசென்னையின் சாபக்கேடாக தொடரும் கொடுங்கையூர் குப்பைமேட்டில் புதிதாக முளைத்துள்ள கழிவு எரியூலை, அப்பகுதி மக்களின் உயிரை குடிக்கும் எமனாக உருவெடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட Burning Human Rights என்ற கள ஆய்வில், உலை கக்கும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறல், தோல் நோய்களுக்கு ஆளாகி சுமார் 93 சதவீத மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிப்பது அம்பலமாகி உள்ளது.

வடசென்னையில்...
சுத்தமான காற்றை சுவாசிப்பதும், நோயற்ற வாழ்வை வாழ்வதும் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. ஆனால், வடசென்னையின் கொடுங்கையூர் மக்களுக்கு அந்த உரிமை பல தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வருகிறது.
தலைநகரின் ஒட்டுமொத்த கழிவுகளையும் சுமக்கும் சுமைதாங்கியாக மாற்றப்பட்டிருக்கும் கொடுங்கையூர், தற்போது கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை என்ற புதிய வடிவ ஆபத்தில் சிக்கி தவிக்கிறது.

நேரடி கள ஆய்வில்...
இந்த துயரத்தின் வீரியத்தை தோலுரித்து காட்டும் வகையில் Burning Human Rights என்ற ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் FEMA அமைப்பை சேர்ந்தவர்கள் இணைந்து, கொடுங்கையூர் எரிஉலையை சுற்றியுள்ள 8 குடியிருப்புகளில் வீடு வீடாக சென்று இந்த நேரடி கள ஆய்வை நடத்தி உள்ளனர்.

கண்ணீர் பதிவு
இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டும் புள்ளி விவரங்கள் வெறும் எண்கள் அல்ல, வடசென்னை மக்களின் வீடுகளில் புதைந்து கிடக்கும் வேதனையின் சாட்சியங்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 415 பேரில், 331 பேர் கடந்த 2 ஆண்டுகளில் கடுமையான உடல்நல கோளாறுகளுக்கு ஆளாகி உள்ளனர். இதில், 93 புள்ளி 4 சதவீத மக்கள், தங்களின் இந்த அவல நிலைக்கு எரிஉலையிலிருந்து வெளியேறும் நச்சு புகையே நேரடி காரணம் என்று கண்ணீருடன் பதிவு செய்துள்ளனர்.

வாழ்வாதாரம் கேள்விக்குறி
தீராத தலைவலி, தோல் நோய், கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் மக்கள் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். உடல்நலக் குறைவால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் கல்வியும், பெரியவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருவாயும் இழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சர்வதேச அளவில்...
இந்த ஆய்வறிக்கையை தயாரித்த குழுவினர், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோரிடம் நேரில் வழங்கி நடவடிக்கை கோரியுள்ளனர். அதுமட்டுமன்றி, ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான சிறப்பு நிபுணரின் கோரிக்கையை அடுத்து, இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றப்பட்டு, சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

மனித உரிமைகளை நசுக்கும்...
இதுகுறித்து பேசிய, வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மதுவந்தி, அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் இந்த அறிக்கையை டுத்தபோது, அவர்களுக்கு இதுகுறித்த அடிப்படை விழிப்புணர்வே இல்லை என்பதுதான் வேதனையான உண்மை என்றும், மக்களின் உயிரை பார்க்காமல், இதை வெறும் புராஜெக்டாக மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தார். கொடுங்கையூர் போதாதென்று, மேலும் 7 இடங்களில் இதுபோன்ற எரிஉலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், மனித உரிமைகளை நசுக்கும் இந்த திட்டங்களை அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பேரழிவுப் பாதையில்...
மறுபுறம், அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் கொடுங்கையூர் ஏரியும் இந்த நச்சு புகையால் தனது சூழலியல் அடையாளத்தை இழந்து வருகிறது. இதுதொடர்பாக பேசிய, வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சண்முகம், முக்கியமான சூழலியல் மண்டலத்தில் நச்சு புகையை கக்கும் எரிஉலையை கொண்டு வருவது பேரழிவு பாதை எனவும், வட சென்னையை இனியும் குப்பை தொட்டியாக நடத்தாமல், இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

குரலுக்கு செவிசாய்க்குமா?
ஒரு நகரின் மின்சார தேவைக்காக, ஏழை மக்களின் சுவாச காற்றையும் வாழ்வுரிமையையும் பலிகடாவாக்குவது எந்த விதத்தில் நியாயம்? ஐ.நா வரை சென்றிருக்கும் கொடுங்கையூர் மக்களின் இந்த கண்ணீர் குரலுக்கு தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் செவிசாய்க்குமா? அல்லது திட்டத்தை விரிவாக்குவதிலேயே குறியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் வினோத்குமாருடன் செய்தியாளர் பாஸ்கர் பாண்டியன்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved