Also Watch
Read this
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், சென்னையின் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை தப்புமா? அல்லது சிக்குமா? என்ற கேள்வி எழுகிறது. 95 சதவீத வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக நிர்வாகம் சொல்லும் புள்ளி விவரங்கள் ஆறுதல் தந்தாலும், எஞ்சியிருக்கும் அந்த '5 சதவீத' இணைப்பில்லாத வடிகால்கள்தான் பெருவெள்ளத்தின் ஆபத்து புள்ளிகளாக உருவெடுத்துள்ளன.

வடிகால் பணிகள்...
சென்னையைப் பொறுத்தவரை ஒவ்வொரு பருவமழை சமயத்திலும் மழைநீர் வெள்ளம்போலச் சூழ்ந்து, பொது மக்கள் பாதிக்கப்படுவது வழக்கமாகிப்போன நிலையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில் பருவமழை தொடங்குவதற்கு ஒரு சில வாரங்கள் கூட இல்லாத போதிலும், இதுவரை வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்ற தகவல் வெளியாகி சென்னை வாழ் மக்களை சற்று பீதியில் ஆழ்த்தியுள்ளது.

பாதியில் நிற்பதாக...
சென்னை திருமங்கலம் முதல் ரவுண்டானா வரையிலான பகுதிகள், ஆற்காடு சாலையில் கோடம்பாக்கம் முதல் வளசரவாக்கம் வரையிலான பகுதிகள், காமராஜர் சாலை உள்ளிட்டவற்றில், மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

அதோடு, ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், திரு.வி.க.நகர் ஆகிய இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகள் பாதியில் நிற்பதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அக்.10ஆம் தேதிக்குள்...
கடந்த 2022ஆம் ஆண்டின் முதல் வடிகால் பணிகளுக்காக 6 ஆயிரத்து 66 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 385 கிலோ மீட்டர் நீளப் பணிகளில் இதுவரை சுமார் ஆயிரத்து 314 கிலோ மீட்டர் நிறைவடைந்துள்ளது.

இதன்படி 95 சதவீத பணிகள் நிறைவடைந்தாலும் 5 சதவீத பணிகள் எஞ்சியது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளிலிருந்து சென்னையை காப்பாற்றும் வடிகால் பணிகளை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணையித்துள்ளது.

18 கி.மீ. நீளத்தில்...
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் வடிகால் குழாய்களை இணைக்கும் பணியை பாதியிலேயே விட்டது பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இதன்படி மாநகர் முழுவதும் வடிகால் இணைப்புகள் இல்லாத 105 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளை உள்ளடக்கிய ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, 18 கிலோ மீட்டர் நீளத்தில் 7.2 கிலோ மீட்டர் பணிகள் முடிவடைந்துள்ளது. 18 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த 18 கிலோ மீட்டர் வடிகால் அமைப்பானது நீரை ஒருபுறம் விருகம்பாக்கம் கால்வாய் வழியாக கூவத்திற்கும், மற்றொருபுறம் போரூர் வழியாக அடையாற்றுக்கும் திருப்பிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பணிகளின் நிலை...
ஆயிரத்து 715 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்ட கோவளம் வடிநிலத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 310 கிலோமீட்டர் நீளமுள்ள பணிகளில், இதுவரை 272.80 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோல், 470.50 கோடி ரூபாய் மதிப்பிலான மூலதன நிதித் திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 131.70 கிலோமீட்டர் பணிகளில், 120.10 கிலோமீட்டர் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும், பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் மாதவரம் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் 18.3 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 1.16 கிலோமீட்டர் நீளமுள்ள வடிகால் பணிகளில், 928 மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பணிகள் விரைவு, கண்காணிப்பு...
மாநகராட்சியில், மழைநீர் வடிகால் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து உள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும் நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

வடிகால்களில் இணைக்கப்படாத இடத்தில் பம்பிங் மூலமாகத் தண்ணீரை எடுத்து கனெக்டிவிட்டி வழியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். அதோடு மழைநீர் வடிகால் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அவர் தகவல் தெரிவித்தார்.

சென்னை தத்தளிக்குமா?
பருவமழை சென்னை மக்களின் கண்ணீராக மாறுவதற்குள் மிச்சம் உள்ள வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? இல்லை கடந்த கால வரலாற்றை போல் சென்னை தத்தளிக்குமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved