Also Watch
Read this
தமிழக அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் வெற்றி பயணம் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
’ஈரோட்டில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து உரிமையாளர், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தவெக அரசின் வெற்றி பயணம்
திமுக ஆட்சியில் வேலைக்கு செல்லும் மகளிர், கல்லூரி மாணவிகள், மூத்தோர் உள்ளிட்டோர் பயன் பெறும் வகையில் செயல்படுத்தி வந்த விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றி பயண திட்டம்’ என்ற பெயரில் அக்டோபர் 2ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். தவெக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் 12 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பேருந்துகளில், மகளிர் இலவசமாக பயணம் செய்ய வகை செய்யப்பட்டுள்ள வெற்றி பயண திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

தனியாருக்கு வருவாய் இழப்பு
அவரது மனுவில் கூறி இருப்பதாவது;
வெற்றி பயண திட்டம் காரணமாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும், பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமையை மீறும் செயல்.
வெற்றி பயண திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பேருந்துகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

இடைக்கால தடை
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழான முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தொடர்பாக எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால், இந்த திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை, வெற்றி பயண திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது.

’அரசாணை உள்ளது, தடை விதிக்க முடியாது’
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி - நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது;
ஒட்டுமொத்த திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது. வெற்றி பயணத் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தடை விதிக்க முடியாது. ஒரு மாவட்டத்தில் செயல்படும் தனியார் போக்குவரத்து சங்கம் எந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு தடை கோர முடியும். அக்டோபர் 2ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அரசாணையை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம். அதிலும், தங்களது மாவட்டத்திற்கு மட்டும் திட்டத்தை செயல்படுத்த தடை கோர மனுதாரருக்கு உரிமை உள்ளது
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப்பெற மனுதாரரை அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved