25 ஆண்டு கால அரசியல் பணிக்கு மக்களின் ஆசிதான் காரணம்
இந்திய மக்களின் ஆசியால் தனது அரசியல் பணி 25 ஆண்டுகளை கடந்து சாத்தியமாக இருப்பதாகபிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டெல்லியில் சேவா ஜோதி யாத்திரை நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர், கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி முதன்முறையாக குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, இந்த 25 ஆண்டு மைல்கல்லை எட்டுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றார்.
இன்று தாம் இருக்கும் இடத்திற்கும், வகிக்கும் பதவிக்கும் நாட்டு மக்களின் ஆசியும், அசைக்க முடியாத நம்பிக்கையுமே முழு காரணம் என்றவர் மக்களுக்கும் உடன் இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மக்கள் பணி - பிரதமருக்கு அமித்ஷா வாழ்த்து
மக்கள் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது சேவை மற்றும் தளராத அர்ப்பணிப்பின் மூலம் ஏழைகள் மற்றும் பெண் முன்னேற்றத்திற்கும், இளைஞர் நலனிலும் பிரதமர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாட்டில் பிரதமர் முன்மாதிரியாக விளங்குவதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையார் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம்
மக்கள் பணியில் 25 ஆண்டுகள் நிறைவை அடுத்து டெல்லி சரோஜினி நகரில் உள்ள பிள்ளையார் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் விநாயகப் பெருமானை பிரதமர் மோடி மனமுருகி வேண்டினார்.