Also Watch
Read this

76 வயதானாலும் இன்னும் ஹீரோவாக நடிக்க ஒரே காரணம் ரசிகர்கள் தான் என்று, ஜெயிலர்-2 புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம் தெரிவித்தார்.
ஜெயிலர்-2ல் ரஜினி...
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்-2' திரைப்படத்தின் சிறப்பு விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது;
வழக்கமாகப் பெரிய அரங்குகளில் ஆடியோ வெளியீடு நடத்தும்போது, ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நிகழ்ச்சி நீண்ட நேரம் நடப்பதால் ரசிகர்களும் சோர்ந்து விடுகிறார்கள். இந்த வழக்கத்தை மாற்றி, படக்குழுவினரைத் தனித்தனியாக நேர்காணல் செய்யும் வகையில், வித்தியாசமாக நிகழ்ச்சியைத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது.
இருப்பினும், இந்த முறை ரசிகர்களை நேரில் சந்திக்க முடியாமல் போனது எனக்குப் பெரிய வருத்தம்தான். எதிர்காலத்தில் இந்த குறையை நிச்சயம் சரி செய்வேன்.

ஜெயிலர்-2 உருவானது...
தமிழ் சினிமாவில் இமாலய வெற்றி பெற்ற 'பாட்ஷா' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் பலரும் அணுகியும் அதை நிராகரித்தேன். ஆனால், ஜெயிலர் 2 படத்திற்கு ஒப்புக்கொண்டேன்.
நெல்சனை அழைத்து,'ஜெயிலர் 2' பண்ணலாமா? என்று கேட்டபோது, நெல்சன், "அதெல்லாம் வேண்டாம் சார்" என்று மறுத்துவிட்டார்.
ஆனால், 'ஜெயிலர்' முதல் பாகத்தின் ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு அதை உற்று கவனித்தபோது அதில் சில முக்கிய லீடுகள் இருந்தன. வில்லன் வர்மா, தமக்கு பின்னால் சர்வதேச அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதாகக் கூறுவது மற்றும் ஜெயிலரிடம் 1000 கோடிக்கும் அதிகமான பணத்துடன் 3 கன்டெய்னர் இருப்பது போன்ற காட்சிகள் அடுத்த பாகத்திற்கான வலுவான அடித்தளமாக அமைந்தன.

'வேட்டையன்' படப்பிடிப்பில் இருந்தபோது, நெல்சன் திடீரென அழைத்து, "சார், நீங்கள் சொன்னது போல ஜெயிலர் 2 பண்ணுவதற்கு ஒரு மிகச்சிறந்த கதைக்களம் கிடைத்துள்ளது," என்று கூறி முழுக் கதையையும் உருவாக்கினார். கதை மிகவும் பிடித்திருந்ததால், உடனே ஓகே சொல்லிவிட்டேன்.
சரக்கு தீர்ந்து விட்டதா?
பொதுவாக ஒரு படத்தின் பார்ட்-2 எடுக்கிறார்கள் என்றாலே, இயக்குநருக்கு 'சரக்கு தீர்ந்துபோச்சு' என்று சினிமா வட்டாரத்தில் விமர்சிப்பார்கள். ஆனால், நெல்சன் இந்த 'ஜெயிலர் 2' கதையை முதல் பாகத்தை விட மிகவும் விறுவிறுப்பாகவும், யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடனும் செதுக்கியுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி
நான் நடிகர் என்பதை விரும்புகிறேன். ஆனால், அதைவிட பேருந்து நடத்துநர் வேலையைத்தான் அதிகம் விரும்புகிறேன். இப்போதும் என்னை ஒரு பேருந்து நடத்துநராகவே நினைத்துக் கொள்கிறேன்.
ஒரு பேருந்து நடத்துநர் எப்பொழுதும் தன்மையாகவும் பணிவாகவும் தானே நடந்துகொள்வார். அதுதான் எனது எளிமைக்கு காரணம்.

எனக்கு இப்போது 76 வயதாகிறது. இந்த வயதிலும் நான் இன்னும் ஒரு கமர்சியல் ஹீரோவாகத் தொடர்ந்து நடிப்பதற்கு ஒரே காரணம், என்னை வாழவைக்கும் தெய்வங்களான எனது ரசிகர்களாகிய நீங்கள்தான். உங்களால் தான் நான் இன்றும் இங்கு இருக்கிறேன்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved