Also Watch
Read this
இடதுசாரிகள், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், இடைத்தேர்தலில் தனித்துக் களம் கண்டு சொற்ப வாக்குகளையே பெற்றுள்ளனர்.
தவெகவும் திராவிடக் கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தும் தேர்தல் களத்தில், இடதுசாரிக் கட்சிகளின் இடம் என்ன? என்ற கேள்வியை இது எழுப்புகிறது. தொழிலாளர் இயக்கம், விவசாயிகள் போராட்டம், நில உரிமை, கூலி உயர்வு, பொதுத்துறை பாதுகாப்பு, சமூகநீதி போன்ற கேள்விகளை முன்வைத்த அரசியல் இயக்கங்களாக கம்யூனிஸ்ட் கட்சிகள் நீண்ட காலமாக ஒரு தனித்த இடத்தைத் தக்கவைத்துள்ளன. ஆனால், தேர்தல் அரசியலில் அவற்றின் பயணம் சறுக்கல்களும் திசைமாறுதல்களும் நிறைந்ததாகவே இருக்கிறது.

தனித்த அரசியல் சக்தி...
தேர்தல் அரசியல் அடிப்படையில் இடதுசாரிகளின் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பார்க்கலாம். 1952 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் இடதுசாரிகள் தனித்த அரசியல் சக்தியாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, 1952ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், அப்போது ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த CPI, மதராஸ் மாநில சட்டமன்றத் தேர்தலில் 62 இடங்களை வென்றது.
மொத்தம் 375 இடங்களைக் கொண்ட அந்த சட்டமன்றத்தில், காங்கிரஸுக்கு அடுத்த பெரிய சட்டமன்றக் கட்சிகளில் ஒன்றாக CPI உருவெடுத்தது. 26.40 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும், 13.18 சதவீத வாக்குகளையும் பெற்றது. தொழிலாளர், விவசாயிகள், ஏழை மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அரசியல், அப்போது தேர்தல் ஆதரவாகவும் வெளிப்பட்டது.

தேர்தல் ஆதரவு
1957 தேர்தலில் CPI போட்டியிட்ட 58 இடங்களில் 4 இடங்களை மட்டுமே வென்றது. இருந்தாலும் அந்தக் கட்சிக்கு 8.24 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன; வாக்கு சதவீதம் 7.40 ஆக இருந்தது. 1962ல் மதராஸ் மாநிலத்தில் CPI போட்டியிட்ட 68 இடங்களில் 2 இடங்களையே வென்றது. ஆனால் 9.79 லட்சம் வாக்குகள், 7.72 சதவீத வாக்கு எனக் கணிசமான தேர்தல் ஆதரவு தொடர்ந்தது. தொகுதி வாரியான போட்டி, கூட்டணி, எதிரணி வாக்கு பிளவு, உள்ளூர் நிலவரம் போன்றவை இடங்களின் எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
1967 முதல்...
தேர்தல் அரசியலில் இடதுசாரிகளின் இரண்டாவது கட்டம் என்பது திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பிறகான கூட்டணி அரசியலைக் குறிக்கிறது. 1967 முதல் திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய அரசியல் அணிகளுடனும் இடதுசாரிகள் வெவ்வேறு காலங்களில் தேர்தல் கூட்டணிகளை அமைத்து உள்ளனர்.
இரண்டு இடதுசாரி இயக்கம்
இதற்கு காரணம் 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு. உள்கட்சிக் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்த நிலையில், CPI-யிலிருந்து CPM உருவானது. இதற்குப் பிறகு தமிழகத் தேர்தல் அரசியலில் “கம்யூனிஸ்ட்” என்ற ஒரே அரசியல் அடையாளத்துக்கு பதிலாக, CPI மற்றும் CPM என இரண்டு இடதுசாரி இயக்கங்கள் தனித்த தேர்தல் சக்திகளாக உருவெடுத்தன.

1967 மதராஸ் மாநில சட்டமன்றத் தேர்தல், இந்தப் பிரிவுக்குப் பிறகு நடைபெற்ற முதல் முக்கிய தேர்தல். அந்தத் தேர்தலில் CPM போட்டியிட்ட 22 இடங்களில் 11 இடங்களை வென்றது. அதே நேரத்தில் CPI 32 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களை மட்டுமே வென்றது. தமிழக அரசியலில் இன்னொரு மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸின் நீண்டகால ஆட்சி முடிந்து, திமுக ஆட்சிக்கு வந்தது.

திமுக கூட்டணியில்...
திமுக தலைமையிலான கூட்டணியில் CPIM உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம் தமிழகத்தில் இடதுசாரிகளுக்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையிலான தேர்தல் ஒத்துழைப்புக்கு ஒரு முக்கிய அடித்தளம் அமைந்தது.
1971 தேர்தலில் CPI 8 இடங்களை வென்றது. அந்தத் தேர்தலில் திமுக 184 இடங்களுடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த காலகட்டத்தில் இடதுசாரி கட்சிகளுக்கும் திமுகவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு தொடர்ந்து வெளிப்பட்டது.

எம்ஜிஆர் உடன்...
ஆனால், அடுத்து தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவான எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்த 1977 தேர்தல், CPMன் தமிழக தேர்தல் வரலாற்றிலும் முக்கியமான ஒன்று. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் CPM 12 இடங்களை வென்றது.
இது, தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சட்டமன்ற பிரதிநிதித்துவம், தனித்து போட்டியிடும் வலிமையால் நிர்ணயிக்கப்படவில்லை; எந்த பெரிய கட்சியுடன், எந்த தொகுதிகளில், எந்த தேர்தல் சமன்பாட்டில் இணைகின்றன என்பதும் முக்கியமானது என்ற தேர்தல் பாடத்தை வெளிப்படுத்தியது.
1980 தேர்தலில் CPM 11 இடங்களையும், CPI 9 இடங்களையும் 1984 தேர்தலில் CPM 5 இடங்களையும் CPI 2 இடங்களையும் வென்றன. 20 இடங்களிலிருந்து 1984ல் 7 இடங்களுக்கு வந்தது, தேர்தல் அரசியலில் இரு கட்சிகளின் வலிமை கூட்டணி கணக்குகளுடனும் தேர்தல் அலைகளுடனும் எவ்வாறு மாறியது என்பதை காட்டுகிறது.

வெவ்வேறு அணிகளில்...
1989 தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், CPI(M) 15 இடங்களை வென்றது; CPI 3 இடங்களைப் பெற்றது. 1991 தேர்தல் அதற்கு முற்றிலும் மாறுபட்ட முடிவைத் தந்தது. அதிமுக-காங்கிரஸ் அணி 225 இடங்களைப் பெற்ற நிலையில், CPI(M) ஒரு இடத்திலும் CPI ஒரு இடத்திலும் மட்டுமே வென்றன. 1996 தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற CPI 8 இடங்களையும் CPI(M) ஒரு இடத்தையும் வென்றன. ஆனால், ஒரே கொள்கைத் தளத்தில் இருந்தாலும், தேர்தல் நேர அரசியல் நிலைப்பாடுகளால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெவ்வேறு அணிகளில் இருந்தன.

2001 தேர்தலில் CPI(M)-க்கு 6, CPI-க்கு 5 என 11 சட்டமன்ற இடங்கள் கிடைத்தன. 2006ல் 15 இடங்கள், 2011-ல் 19 இடங்கள் என இரு தேர்தல்களிலும் இடதுசாரிகள் தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் கணிசமான பிரதிநிதித்துவத்துடன் இருந்தனர்.

சரிந்த வாக்கு சதவீதம்
இடதுசாரிகளின் தேர்தல் வரலாற்றில் மூன்றாவது கட்டம் என்பது 2016ல் தொடங்குகிறது. கூட்டணி வழியாக பிரதிநிதித்துவத்தைத் தக்கவைக்கும் அரசியலுக்கு இடதுசாரிகள் சரிந்த காலகட்டம் இது. 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட CPI 23 இடங்களிலும், CPI(M) 25 இடங்களிலும் களம் கண்டன. ஆனால், இரு கட்சிகளும் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இரு கட்சிகளின் வாக்கு சதவீதமும் ஒரு சதவீதத்துக்குக் கீழே இருந்தது.
2016ல் பூஜ்யமான சட்டமன்ற பிரதிநிதித்துவம், இடதுசாரி தேர்தல் அரசியலின் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. 2016ல் சட்டமன்றத்தில் இடமின்றிப் போன இரு கட்சிகளும் 2021 மற்றும் 2026-ல் தலா 2 இடங்களைப் பெற்றன.

அடுத்த அரசியல் அத்தியாயம்
இந்த வரலாற்றைப் பார்க்கும்போது, 1952ல் 62 இடங்களுடன் சட்டமன்றத்தில் நுழைந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வாரிசுகள், இன்று நான்கு இடங்களுக்குள் சுருங்கியிருப்பது வெறும் எண்ணிக்கை மாற்றம் மட்டும் அல்ல. அரசியல் களத்தில் இன்னும் கொள்கை இருக்கிறது. குரலும் இருக்கிறது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதித்துவமும் இருக்கிறது.

ஆனால், அந்த அரசியல் குரலை தனித்த தேர்தல் வலிமையாக மாற்றும் திறன் எங்கே போனது? என்ன இருந்தாலும் இடதுசாரிகள் தமிழக அரசியலில் இன்னும் ஒரு கொள்கை சக்தியாக இருக்கிறார்களா? அல்லது தேர்தல் அரசியலில் வெறும் ‘அட்டைக் கத்திகளாக’ மட்டுமே மாறிவிட்டார்களா? அந்தக் கேள்விக்கான பதில்தான், தமிழக இடதுசாரிகளின் அடுத்த அரசியல் அத்தியாயத்தை தீர்மானிக்கப் போகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved