news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

மனித மூளையின் ரகசியங்களைத் தேடும் அறிவியல் திட்டம்

சென்னையில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை ஐஐடியில் செயல்பட்டு வரும் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், 100க்கும் மேற்பட்ட மனித மூளைகளை முப்பரிமாணத்தில் வரைபடமாக்கும் அறிவியல் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். கருவில் வளரும் சிசு முதல் முதுமைப் பருவம் வரையிலான மனித மூளைகளைச் செல்லின் நுண்ணிய அளவில் முப்பரிமாண வரைபடங்களாக உருவாக்கும் இந்த உலகளாவிய அறிவியல் திட்டம் குறித்த செய்தித் தொகுப்பு.

அறிவியலுக்கு சவால்

மனித மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல் மற்றும் அவற்றுக்கிடையிலான சிக்கலான தொடர்புகள் உள்ளன. சிந்தனை, நினைவாற்றல், கற்றல், உணர்ச்சி, உடல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு மூளை அடிப்படையாக உள்ளது.

மூளையின் பெரிய கட்டமைப்புகளை ஸ்கேன் மூலம் அறிய முடிந்தாலும், அதன் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள செல்களின் அமைப்பு, அவற்றின் இருப்பிடம், திசுக்களின் தன்மை மற்றும் நரம்புப் பாதைகளை மிக நுணுக்கமாகப் புரிந்துகொள்வது அறிவியலுக்கு முக்கியமான சவாலாக உள்ளது.

முப்பரிமாண வரைபடங்கள்
இதற்குத் தீர்வாக, 100க்கும் மேற்பட்ட மனித மூளைகளை செல்லின் அளவிலான விவரங்களுடன் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து, அவற்றை முப்பரிமாண வரைபடங்களாக உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

ஒரு புவியியல் வரைபடம் நிலப்பரப்பின் பல்வேறு அம்சங்களைக் காட்டுவதுபோல, இந்த மூளை அட்லஸ்கள் மூளையின் உட்புற அமைப்புகள் மற்றும் செல்களின் பரவலை விரிவாகப் புரிந்துகொள்ள உதவும்.

மனித மூளையின் வளர்ச்சி, அதன் நுண்ணிய கட்டமைப்புகள் மற்றும் வயதுக்கு ஏற்ப ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்களிப்பை இந்த திட்டம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருவில் இருந்து முதுமை வரை: ஆய்வின் சிறப்பம்சம்
மூளை அட்லஸ் திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், மனித வாழ்க்கையின் பல்வேறு பருவங்களை உள்ளடக்கிய மூளை வரைபடங்களை உருவாக்குவதாகும்.

கருவில் வளரும் சிசுவின் மூளை எவ்வாறு உருவாகிறது, குழந்தைப் பருவத்தில் அதன் கட்டமைப்புகள் எவ்வாறு வளர்கின்றன, வயதுவந்த நிலையில் மூளையின் அமைப்பு எவ்வாறு காணப்படுகிறது, முதுமையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான பதில்களைத் தேட இந்த ஆய்வு உதவும்.

மேலும், ஆரோக்கியமான மூளைகளுடன் நோய்களால் பாதிக்கப்பட்ட மூளைகளையும் ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம், பல்வேறு நரம்பியல் நோய்களை அடையாளம் காண முடியும்.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் முப்பரிமாண மூளை வரைபடங்கள்
இந்த ஆராய்ச்சியில் High-resolution microscopic imaging எனப்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட நுண்ணோக்கிப் படமெடுப்பு, மூளைத் திசு ஆய்வு, Computer-based 3D reconstruction எனப்படும் கணினி வழியிலான முப்பரிமாண மறுகட்டமைப்பு மற்றும் பெரிய அளவிலான அறிவியல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மூளைத் திசுக்களின் மிக மெல்லிய பகுதிகள் படமெடுக்கப்பட்டு, அவற்றில் காணப்படும் நுண்ணிய கட்டமைப்புகள் டிஜிட்டல் தரவுகளாக மாற்றப்படுகின்றன. பின்னர் பல்வேறு படங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மூளையின் உட்புற அமைப்புகளை முப்பரிமாணத்தில் காணக்கூடிய வரைபடங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதன் மூலம் வழக்கமான மருத்துவப் படங்களில் தெளிவாகத் தெரியாத நுண்ணிய கட்டமைப்புகளையும் ஆராய்ச்சியாளர்கள் விரிவாக ஆய்வு செய்ய முடியும்.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை ஐஐடி
சென்னை ஐஐடியின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம், மனித மூளையைச் செல்லின் நுண்ணிய அளவில் வரைபடமாக்கும் ஆராய்ச்சியில் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளது.

2024 டிசம்பரில், மனிதக் கருவின் மூளைக்கான DHARANI என்ற உயர் தெளிவுத்திறன் கொண்ட முப்பரிமாண அட்லஸை இந்த மையம் வெளியிட்டது. இதில் 5,132 மூளைத் திசுப் பகுதிகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்ட மூளைப் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டன.

அதேபோல், 2026 ஜூன் மாதத்தில் ANCHOR என்ற மனித மூளைத்தண்டு அட்லஸும் வெளியிடப்பட்டது. மூளைத்தண்டின் 200க்கும் மேற்பட்ட நரம்பு மையங்கள் மற்றும் நரம்பிழைப் பாதைகளைப் பற்றிய விரிவான தகவல்களை இந்த அட்லஸ் வழங்குகிறது.

புதிய உலகளாவிய திட்டம்
இந்த முன்னோடி ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, மனித வாழ்க்கையின் பல்வேறு பருவங்களையும் உள்ளடக்கிய பெரிய அளவிலான மூளை வரைபடத் தொகுப்பை உருவாக்கும் நோக்கில் புதிய உலகளாவிய திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பக்கவாதம் உள்ளிட்ட நோய்களுக்கான ஆராய்ச்சிக்கு உதவுமா?
மூளை வரைபட ஆராய்ச்சியின் நீண்டகாலப் பயன்களில் ஒன்று, நரம்பியல் நோய்களைப் பற்றிய புரிதலை விரிவுபடுத்துவதாகும்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூளையின் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வது, நோயின் உயிரியல் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள உதவும்.

அல்சைமர் நோய், டிமென்ஷியா மற்றும் மூளை வளர்ச்சியுடன் தொடர்புடைய சில பாதிப்புகளையும் ஆராய இத்தகைய தரவுகள் உதவக்கூடும்.

சென்னை ஐஐடி நிகழ்ச்சியில், C-STROKE எனப்படும் மனித மூளை பக்கவாதம் தொடர்பான வரைபடத்தையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். இது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூளையிலிருந்து பெறப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட நுண்ணோக்கி தரவுகளை கொண்ட வரைபடமாகும்.
இத்தகைய ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் புதிய நோயறிதல் முறைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான வழிமுறைகளை உருவாக்க உதவும்.

திட்டத்தின் முக்கியத்துவம்
மூளையின் கட்டமைப்புகளைப் பற்றிய புதிய தகவல்களை உருவாக்குவதோடு, உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தக்கூடிய அறிவியல் வளமாக மாற்றுவதுதான் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் அடங்கியுள்து.

மனித மூளையைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதோடு, இந்தியாவில் உருவாக்கப்படும் அறிவியல் தொழில்நுட்பங்கள் சர்வதேச ஆராய்ச்சிக்கும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.

மனித மூளையின் ஒவ்வொரு செல்லிலும் மறைந்திருக்கும் ரகசியங்களை அறிவியலின் மூலம் வெளிக்கொணர்ந்து, அந்த அறிவை எதிர்கால மருத்துவ ஆராய்ச்சிக்கும் மனித நலனுக்கும் பயன்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நீண்டகால இலக்காகும்.

Related Link

"ஆட்சிகள் மாறினாலும் வளர்ச்சி தொடரும்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவ தம்பதி வீட்டில் கைவரிசை, கம்பி நீட்டிய காதல் ஜோடி அதிரடி கைது

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved