Also Watch
Read this
திருப்பூரில், திருட்டு ஐபோன் கொடுத்து ஏமாற்றிய விவகாரத்தில் கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டி கொ* செய்த 12ஆம் வகுப்பு மாணவன் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் நடுங்க வைத்துள்ளது. 8 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அரங்கேறிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
செல்போன் விவகாரம்...
திருப்பூர், ஏபிடி சாலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரின் மகன் ஸ்ரீஹரி, கொடுவாய் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே நண்பர்கள் மூலம் திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனுடன் ஸ்ரீஹரிக்கு நட்பு ஏற்பட்டு இருவரும் நண்பர்களாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பள்ளி மாணவன் செல்போன் வாங்கி உள்ள விவரத்தை ஸ்ரீஹரியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

செல்போன் வாங்கிய பிறகு...
இதனை கேட்டதும் குறைந்த விலையில் ஐபோன் ஒன்று உள்ளதாகவும், அதனை வாங்கி தருவதாக கூறி, மாணவனிடம் இருந்து 8 ஆயிரம் ரூபாயை வாங்கிய ஸ்ரீஹரி, சொன்னபடியே ஐபோன் ஒன்றை வழங்கினார். ஐபோன் லாக் ஆன நிலையில் இருந்ததை கண்டு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் தான் அது திருட்டு செல்போன் என்பதும், அதனால் தான் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
ஏமாற்றம், வாக்குவாதம்
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன் இது குறித்து ஸ்ரீஹரியிடம் கேள்வி எழுப்பியபோது, ஐபோனை கரூரில் இருந்து வாங்கி வந்ததாகவும், வேறு செல்போனை மாற்றித்தருவதாக கூறி கொடுத்த ஐபோனை வாங்கி சென்று ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது.

பின்னர், பணத்தை கேட்டு பலமுறை முயற்சி செய்தும் தராமல் இழுத்தடித்து வந்ததால் ஆத்திரமடைந்த மாணவன், ஸ்ரீஹரி வீட்டிற்கு நேரில் சென்று அவரை நைசாக பேசி வெளியே அழைத்து வந்து மீன் வெட்டும் கத்தியால் கொடூரமாக வெட்டி கொ* செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நீதிமன்றத்தில் சரண்
சம்பவம் செய்த கையோடு எவ்வித பயமும் இல்லாமல் +2 மாணவன் திருப்பூர் நீதிமன்றத்தில் நேரடியாக சென்று சரணடைந்தார். இதையடுத்து, மாணவனை கைது செய்த போலீசார், அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved