Also Watch
Read this
மாநிலங்களின் வளர்ச்சியில் தான் நாட்டின் முன்னேற்றமே அடங்கி உள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி, தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், மக்களுக்கான சேவை எப்போதும் தொடரும் எனவும், முதல்வர் விஜய் உடன் இணைந்து தமிழக வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு முன்னெடுத்து செல்வோம் எனவும் முழங்கினார்.
"தமிழக சகோதர சகோதரிகளே வணக்கம்"
சென்னை ஐஐடி வளாகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மேடையில், தமிழகத்தின் உள்கட்டமைப்பு, தொழிற்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில், சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதுடன், பணிகள் முடிவடைந்த திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தொடங்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் தமிழக மக்களின் அன்றாட பயணத்தை எளிதாக்குவதுடன், தொழிற்துறையை பலப்படுத்தி இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் என்றார்.

முன்னாள் முதல்வர்கள்...
மாநிலங்களின் முன்னேற்றமே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படை என்ற கொள்கையில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என பல தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய நீண்ட அனுபவம் தனக்கு இருப்பதாகவும், ஆட்சிகள் மாறினாலும் தமிழகத்தின் வளர்ச்சி பயணம் தடையின்றி தொடர்வதாகவும் கூறினார்.

அந்த வரிசையில், தற்போது முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என்ற உறுதியையும் அளித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் 5 நகரங்களில் 250 கிலோ மீட்டராக இருந்த மெட்ரோ சேவை, தற்போது 25 நகரங்களில் ஆயிரத்து 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சென்னையின் உழைப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் முதியோர்களின் பயணத்தை எளிதாக்குவதே இந்த விரிவாக்கத்தின் முதன்மை நோக்கம் எனக்கூறி உரையை நிறைவு செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved