news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

சதுப்பு நிலத்தில் எதற்கு தடுப்புச்சுவர்? நடைபாதையால் யாருக்கு என்ன பயன்?

மீட்சித் திட்டமா? அழிவுத் திட்டமா?

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், நெய்தல் மீட்சி என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை, அந்த ஈரநிலத்தின் இயற்கை சூழலுக்கும், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் நன்மைக்கு பதில், தீமைகளையே அதிகளவில் ஏற்படுத்தும் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பள்ளிக்கரணையில் எதற்காக தடுப்புச்சுவர்?, இத்திட்டத்தின் நோக்கம் என்ன?, எப்போது தொடங்கப்பட்டது?, அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? என்பவை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

15 ஆயிரம் ஏக்கரில்...

ஒரு காலத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்திருந்து, தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளால் தற்போது வெறும் 2,500 ஏக்கருக்குள் சுருங்கியிருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுவதால் 2022ல் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணையில், கடலோர வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஒரு திட்டம் தான் தற்போது அந்த பகுதிக்கே பெரும் ஆபத்தாக முடிந்திருக்கிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற புதியத் திட்டத்தை முந்தைய திமுக அரசு தொடங்கியது.

கிரானைட் நடைபாதை...

உலக வங்கி நிதியுதவியுடன் 1,675 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில், சுமார் 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை ஓரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், சுமார் 21 கோடி ரூபாய் செலவில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரும், அதற்கு உட்புறத்தில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிரானைட் பதித்த  நடைபாதையும் கட்டப்பட்டு வருகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கவோ, மீட்கவோ வேண்டும் என்றால், அதில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதையும், சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதையும் தான் அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அதை விடுத்து மீதமுள்ள சதுப்பு நிலத்தையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில், தடுப்புச்சுவரும், நடைபாதையும் கட்டப்படுவது தான் விநோதத்தின் உச்சம்.

ஆகப்பெரும் சிறப்பு இது தான்...

மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் முழுவதையும் உள்வாங்கி வைத்து கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஆகப்பெரும் சிறப்பே.

அந்த சிறப்புக்கே இழப்பு ஏற்படுத்துவதுபோல் கட்டப்படும் தடுப்புச்சுவரால், குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் சதுப்பு நிலத்திற்கு செல்வதும், வெள்ளநீர் உறிஞ்சப்படுவதும் தடுக்கப்பட்டு, மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களில் பெய்த லேசான மழைக்கே அப்பகுதியில் மழை நீர் தேங்கியதே, எதிர்காலத்தில் வரவிருக்கும் பேராபத்துக்கு நிகழ்கால சாட்சி. இதுமட்டுமின்றி ஈரநிலத்தின் சூழலியல் சிதைந்து, பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுவதோடு, வெளிநாட்டு பறவைகள் வலசை வருவதும் நின்றுவிடும்.

கண்டும் காணாமல் இருப்பதா?

இப்படி எந்த வகையிலும் நன்மை பயக்காத தடுப்புச்சுவர், முழுக்க முழுக்க அரசு பணத்தை வீணடிக்கும் நோக்கத்திலேயே திமுக ஆட்சியின் போது கட்டப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஊழலற்ற ஆட்சி என்று கூறிக் கொள்ளும் தவெக அரசும், இதனை கண்டும் காணாமல் இருப்பதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

ஊழலுக்கு இடம் கொடுக்கும் திட்டங்களையும், மக்களை பாதிக்கும் திட்டங்களையும் தடுப்பதே தங்கள் கொள்கை எனக் கூறி, முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட திட்டங்களை ரத்து செய்துள்ள தவெக அரசு, பள்ளிக்கரணை தடுப்பு சுவர் திட்டத்தை மட்டும் ரத்து செய்யாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், தவெக அரசு கைவிடாமல் தொடர்வதும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை உடைத்தெறிந்து சதுப்பு நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ள அவர், நடவடிக்கை எடுக்காவிட்டால் பாமக பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரித்துள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிவுப்பாதையாக்க அமைக்கப்படும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை திட்டத்தை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா? இயற்கையின் பொக்கிஷத்தை பாதுகாத்து சென்னை மாநகரை பெருவெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Related Link
மின்சாரத்துக்காக உயிரைப் பறிப்பதா? நச்சுப் புகையில் துடிக்கும் வடசென்னை

மின்சாரத்துக்காக உயிரைப் பறிப்பதா? நச்சுப் புகையில் துடிக்கும் வடசென்னை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சதுப்பு நிலத்தில் எதற்கு தடுப்புச்சுவர்? நடைபாதையால் யாருக்கு என்ன பயன்?

17
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved