Also Watch
Read this
MTCயின் மின்சார பேருந்து திட்டம் 12 முறை நீட்டிக்கப்பட்டும் ரத்தாகியுள்ளதுடன், 13 முறை தேதி மாற்றப்பட்டும் ஏலத்திற்கு ஆளே வராத சூழலில், கோப்புகளில் முடங்கியுள்ளது. MTC மின்சாரப் பேருந்து டெண்டர் ஏன் தோல்வியடைந்தது? காரணங்கள் என்ன?
அதிநவீன தாழ்தள மின்சார பேருந்து
சென்னையின் பிரதான சாலைகளில் இயக்குவதற்காக, 12 மீட்டர் நீளமுள்ள ஆயிரம் அதிநவீன தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க கடந்த மார்ச் மாதம் டென்டர் விடப்பட்டு, மாநில பட்ஜெட்டிலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், மாத மாதம் தள்ளி வைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக 12 முறை திருத்த ஆவணங்கள் மூலமாக தேதிகள் நீட்டிக்கப்பட்டன. இறுதியாக, நிர்வாக காரணங்களால் இந்த டெண்டர் ரத்து செய்யப்படுவதாக MTC Metropolitan Transport Corporation (Chennai) ஒரே வரியில் ஒட்டுமொத்த திட்டத்திற்கும் எள்ளும், தண்ணீரும் இறைத்துள்ளது.
13 முறை கால நீட்டிப்பு
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்கள் தங்களின் இல்லங்களுக்கு செல்ல 220 சிறிய ரக ஏசி ஃபீடர் பேருந்துகளை இயக்க பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டது. அரசு இணையதள வரலாற்றிலேயே இல்லாத வகையில் 13 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு, இறுதியாக கதவு திறக்கப்பட்டும், இவ்வளவு பெரிய தலைநகர திட்டத்தில் கலந்துகொள்ள எந்த தனியார்துறை நிறுவனம்கூட முன்வரவில்லை.

இதற்கு முன்பாக, ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் வரவிருந்த 500 மின்சார பேருந்துகள், 300 மினி பேருந்துகளுக்கான ஒப்பந்தமும் இதேபோல் இழுத்தடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது.
ஆக மொத்தம், சென்னைவாசிகளின் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டிய ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அதிநவீன மின்சார பேருந்துகள், இன்று வெறும் அரசாணை தாள்களோடு முடங்கிவிட்டன.

அவகாச நீட்டிப்பு ஏன்?
அரசு இ-டெண்டர் தளத்தின் வரலாற்றிலேயே ஒரு திட்டத்திற்கு 12 முதல் 13 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது ஏன்? விசாரணையில் இறங்கியபோது பல அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது.
பேருந்துகளை வாங்கி இயக்கும் பொறுப்பை ஏற்கும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டண வரம்புகளும், பராமரிப்பு நிபந்தனைகளும் எள்ளளவும் கட்டுப்படியாகவில்லை. 100க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களில் தெளிவின்மை நீடித்தது.

நிறுவனங்களின் சந்தேகங்களை தீர்த்து, ஒப்பந்த விதிமுறைகளை உடனுக்குடன் மாற்றியமைக்காமல், அதிகார வர்க்கம் காலக்கெடுவை மட்டுமே மாதந்தோறும் தள்ளிப்போட்டு வந்ததால், நிறுவனங்கள் இந்த டெண்டரை புறக்கணித்துவிட்டன.

திருத்தி அமைத்து...
ஒரு டெண்டர் ஆளில்லாமலும், மற்றொரு டெண்டர் அதிகாரிகளின் நிர்வாக சொதப்பலாலும் முற்றிலுமாக காற்றில் பறந்துவிட்டன. வெறும் சலுகை அறிவிப்புகளும், பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளும் மட்டும் மக்களுக்கான பயண துயரை தீர்த்துவிடாது. தனியார் நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய வகையிலும், மக்கள் பட்ஜெட்டை பாதிக்காத வகையிலும் ஒப்பந்த நிபந்தனைகளை உடனடியாக திருத்தியமைத்து, புதிய டெண்டர்களை இறுதி செய்ய வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved