Also Watch
Read this
ஓசியில் ஸ்வீட் பாக்ஸ் கேட்டு, கடைசியில் CASH ON DELIVERYயால் ஊரைவிட்டே ஓடிய சோஷியல் மீடியா பிரபலம் வீரமணிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டிருந்த மற்றொரு சோஷியல் மீடியா பிரபலம் மீசை மணி மீண்டும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கிளிசரின் ஊற்றியதுபோன்று கண்ணீர் மழை பொழிந்து, கையெடுத்து கும்பிட்டுள்ள அந்த வீடியோவே தான் பிரபலமாக துடிப்பதற்குதான் எனவும் தன்னை பேட்டி எடுக்குமாறு தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மீசை மணி நச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபலமான மீசை மணி
கூமாப்பட்டி பிரபலம் தங்கபாண்டி, சர்ச்சை சாதனா, நடிகர் விமல் உள்ளிட்டோருடன் வீடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளங்களில் பதிவு செய்து பிரபலமான மதுரை மீசை மணி, பல் துலக்கும் பேஸ்ட்டை தலையில் தேய்த்து குளிப்பது, டெட்டால் வைத்து பல் துலக்குவது என பல நகைச்சுவை வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

சில வீடியோக்கள் சிரிக்க வைத்தாலும் அவரது பல வீடியோக்களை முகம் சுழிக்கதான் வைக்கும். அதனால், சோஷியல் மீடியாவில் அவரை திட்டித் தீர்ப்பதற்கும் ஒரு கூட்டமே உள்ளது.

ஏதோ ஒரு வழியில்...
ஆனால், அதெற்கெல்லாம் அசராத மீசை மணி, சோஷியல் மீடியா மூலம் தனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்தே தனது பெயரை சொல்லி முகம் தெரியாத பலரும் தன்னை அழைப்பதும், அதனை காதுகுளிர கேட்பதும்தான் என சினிமா பிரபலத்தையே மிஞ்சும் அளவிற்கு பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இப்படி ஏதோ ஒருவழியில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த மீசை மணிக்கு பல புரோமோஷன்களும் குவிய அதிலும் பணம் பார்த்தார்.

வீரமணி உடன் மீசை மணி
இந்நிலையில், ஒரு ஸ்வீட் பாக்ஸ்-க்கு ஆசைப்பட்டு CASH ON DELIVERY விவகாரத்தில் சிக்கி, வீட்டைவிட்டே வெளியேறி ஊர் ஊராக சுற்றித்திரிந்த வீரமணியுடன் ஒரு வீடியோ வெளியிட்டார் மீசை மணி.
’நண்பர்களே தம்பி கஷ்டப்படுவது மிகவும் வேதனையாக உள்ளது, அவரை யாருமே கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு அனுப்பி வைக்கப்போகிறேன்,’ எனக்கூறியதோடு இனி இதுபோன்ற சிக்கலில் மாட்டக்கூடாது, ஊர் பக்கமே வராதே என வீரமணிக்கும் அட்வைஸ் செய்தார்.

என்ன தவறு செய்தார்?
தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் பேட்டி கொடுத்து வீரமணிக்கு ஆதரவாக பேசி இருந்தார் மீசை மணி.
நண்பனை காட்டிக்கொடுப்பது தவறு, அதனால் வீரமணி இருக்கும் இடத்தை சொல்லமாட்டேன் எனக்கூறிய அவர் வீரமணி அப்படி என்ன தவறு செய்துவிட்டார், 5 ஆண்டுகளாக அவரை நன்றாக தெரியும், மிகவும் நல்லவர், அதனால் அவருடன் சேர்ந்து வீடியோ எடுத்தேன் எனக்கூறினார்.

கண்ணீர் விட்ட மீசை மணி
’பயணம் சிறக்கட்டும்’ எனக்கூறி வீரமணியை அனுப்பி வைத்த மீசை மணியின் பயணம்தான் சிறக்காமல், முத்து முத்தாக கண்ணீர் வடிக்கும் நிலைக்கு சென்றது.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மறுநாளே மீண்டும் வீடியோவில் ஓடிவந்த மீசை மணி, வீரமணியுடன் வீடியோ போட்டது ஒரு குற்றமா? தன்னை ஏன் பாடாய் படுத்துகிறீர்கள், பெரிய பஞ்சாயத்தே ஆகிவிட்டதாக அழுதார்.

கை எடுத்து கும்பிட்டு..
நான் யாருக்கெல்லாம் புரோமோஷன் செய்தேனோ அவர்களுக்கெல்லாம் போனை போட்டு தனது எண்ணைக்கேட்டு தொந்தரவு செய்தால் நியாயமா?
நான் புரோமோஷன் செய்த கடைக்காரர்கள் தன்னை அசிங்கமாக திட்டி ஒன்றுகூடி அடிக்க வருகிறார்கள், நான் புள்ளைக்குட்டிக்காரன் என்னை விட்டுவிடுங்கள் என கையெடுத்து கும்பிட்டார்.

போலீசில் சொல்வேன்
மேலும், தனக்கே போன் செய்து பேசுங்கள், ஆனால் மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக்கூறிய மீசை மணி தனக்கு தாங்க முடியாத தொந்தரவு கொடுத்தால் போலீசில் சொல்வேன் என எச்சரிச்சையும் விடுத்தார்.
’அடப்பாவமே, உதவி செஞ்ச மனுஷனுக்கு இப்படி ஒரு சோதனையா?’ என ஒருசிலர் அனுதாபப்பட, மற்றொரு பக்கம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை அழைத்து தான் அனுதாப வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், அதனையும் பேட்டி எடுக்க முடியுமா? என போனுக்கு மேல் போனை போட்டு நச்சரித்துள்ளார் மீசை மணி.

ஒரு பேட்டி எடுங்கள்...
இதனால், டென்ஷன் ஆன செய்தியாளர் நிமிடத்திற்கு ஒரு வீடியோ பதிவிடுவீர்கள் அதையெல்லாம் செய்தியாக வெளியிட்டு கொண்டிருக்க முடியுமா? என கண்டித்துவிட்டு இணைப்பை சட்டென துண்டித்தாராம்.
விளம்பர பிரியர் மீசை மணி கண்ணில் கண்ணீரால் குளத்தை கட்டி வீடியோ வெளியிட்டதே வீரமணி மூலம் தான் இன்னும் பிரபலம் ஆக வேண்டும் என்பதுதான் என விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அதனால்தான், செய்தியாளருக்கு போன் செய்து ஒரு பேட்டி எடுங்கள், என தான் பிரபலமாக துடித்ததாகவும் கூறப்படுகிறது. லைக், வியூஸ், கமெண்ட் என சோஷியல் மீடியா வெளிச்சத்திற்காக இதுபோன்று எல்லைமீறும் நபர்களுக்கு பட்டால்தான் புரியும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved