Also Watch
Read this
"நடிகர் தனுஷ் அரசியலில் குதிக்க உள்ளார்," என கடந்த சில மாதங்களாக ஒரு தகவல் உலாவிக்கொண்டே இருக்கும் நிலையில், தனது கட்சிப்பெயரை பதிவு செய்திருப்பதாகவும், அதற்காகத்தான் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷின் கட்சிப்பெயர் தமிழக எழுச்சிக் கழகம் என கூறப்படும் நிலையில், டெல்லியில் முக்கிய நபர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரம் கூறுகிறது.

முதலமைச்சர் ஆன விஜய்
இரு பெரும் திராவிட கட்சிகளை ஓரங்கட்டி அசால்ட்டாக ஆட்சியை பிடித்து, தமிழ்நாடு அரசியல் களத்தை தவெக உற்றுநோக்க வைத்தது, யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான். அதேபோன்று, பல சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அதனால்தான் ரசிகர் மன்றங்களில் கிடக்கும் நூலாம்படைகளை எல்லாம் நீக்கி பளிச்சென மாற்றிக் கொண்டிருப்பதாகவும் பேச்சு அடிபட ஆரம்பித்தது.

நடிகர் சிவகார்த்திகேயன்
இதற்கு ஏற்றார்போல நடிகர் சிவகார்த்திகேயன்கூட சமீபத்தில் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை அரசியல்வாதி போன்று வெள்ளை காஸ்ட்யூமில் சந்தித்து அரசியல் மாநாடு போலவே மாற்றி இருந்தார்.
இதில் கலந்துகொண்டவர்களும்கூட ஏதோ கட்சி தொண்டர்கள் போன்று தான் பலரது கண்ணுக்கு தெரிந்தனர்.

நடிகர் தனுஷ்
அதேபோல், நடிகர் தனுசும்கூட தனது 56ஆவது திரைப்பட பூஜையில் கலந்து கொண்டது முதல் அங்கு கருத்துக்களை உதிர்த்ததுவரை அரசியல் பிரவேசமா? என்றுதான் கேட்க வைத்தது.
ரசிகர்கள், ’தலைவா’ என அழைத்த சத்தத்திலும்கூட அரசியல் பக்கத்தின் வாடை வீசியது. அதேபோல், மதுரை விமான நிலையத்தில் தனுசுக்கு ஒரு பெண் ரசிகை உற்சாக வரவேற்பு கொடுத்து முருகனின் வேலை வழங்கியதும் அப்படித்தான் எண்ண வைத்தது.

இவற்றையெல்லாம் ஒருபாதி மக்கள் அன்பாகவே எடுத்துக்கொண்டாலும் மறுபாதி மக்கள் அரசியல் வருகைக்கான முன்னோட்டம்போன்று உள்ளதாகவே கூறி வந்தனர்.
காரணம், கோவையில் நடந்த மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், அகில இந்திய நற்பணி மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றியதோடு மன்றத்தின் கொடியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கூடவே நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

மாமனார் விட்டதை...
அப்போது, உங்கள் சக்தியை சினிமாவோடு நிறுத்திக்கொள்ளாமல் மக்கள் நலப்பணிகளுக்கும் பயன்படுத்துங்கள் என தனுஷ் பேச ’ஆஹா, இது அரசியல் பேச்சா இருக்கே’ என்றுதான் நினைக்க வைத்தது.
ஒருவேளை மாமனார் விட்டதை மருமகன் பிடிக்க நினைக்கிறாரோ என்ற பேச்சும்கூட அடிபட்டது.

இதனிடையே, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாகூட அரசியலுக்கு வருவது மகனின் முடிவு, கட்சி ஆரம்பித்தால் ஆரம்பித்துவிட்டு போகட்டும், இல்லை என்றால் இருக்கட்டும் என பதிலளித்திருந்தார். இவ்வளவு ஏன்? கடந்த சில தினங்களுக்கு முன்பு கையில் தேசிய விருதோடு வந்த தனுஷிடம் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், மாமனார் ஸ்டைலில் குட்டி புன்னகையைதான் உதிர்த்தாரே தவிர அதெல்லாம் இல்லை என மறுக்கவும் இல்லை. அரசியல் ஆகாது என பளிச்சென சொல்லவும் இல்லை.

ரசிகர் மன்றம் டூ நற்பணி
உண்டு, இல்லை என வாய் திறந்து பதில் சொல்லாவிட்டாலும் ரசிகர் மன்றம் டூ நற்பணி, கட்சிக்கொடி போன்று சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் புதிய கொடி என அவரது மூவ்மெண்ட் அனைத்துமே கறை வேட்டி கட்ட தனுசுக்கும் ஆசை வந்துவிட்டதுபோல என்றுதான் சொல்ல வைத்தது.
தமிழக எழுச்சிக் கழகம்
இதனிடையே, தனுஷ் தான் தொடங்கப்போகும் கட்சியின் பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருப்பதாகவும், தமிழக எழுச்சிக் கழகம் தான் அவரது கட்சியின் பெயர் எனவும் ஒரு தகவல் வெளியானது.
இதற்காகதான், அண்மையில் தனது ரசிகர் மன்றங்களுக்கு மாவட்ட ரீதியாக நிர்வாகிகளையே அவர் நியமித்தார் எனவும் கூறப்பட்டது.

இத்தனை அரசல் புரசல்களுக்கு மத்தியில்தான் டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார் தனுஷ். அரசியல் கட்சி தொடங்கும் பணிகளை நடிகர் தனுஷ் முடுக்கி விட்டுள்ளதாகவும், டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், அவரது டெல்லி பயணமும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, ஒருவேளை இருக்குமோ? உண்மைதானோ? என ரசிகர்களும் வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved