மகளிர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதனை
இந்தியாவின் பாரா-வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அடுத்தடுத்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனையைத் தொடர்ந்துள்ளார்.
முன்னதாக, டோமன் குமாருடன் இணைந்து கலப்பு பிரிவில் தங்கம் வென்றிருந்தவர், மகளிர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா வில்வித்தையில் இரண்டு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இந்திய பாரா நீச்சல் வீரர்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் போது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்திய பாரா நீச்சல் வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் ஜப்பானிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
ஹோட்டல் பணியாளர் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, அவர் மீது வாழ்நாள் தடை விதிப்பது குறித்து இந்திய பாராலிம்பிக் கமிட்டி பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கான F54 வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான F54 வட்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை சுவர்ணா ராஜ் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் மகளிருக்கான W1 தனிநபர் வில்வித்தை பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்வாதி சௌத்ரி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பேட்மிண்டன் போட்டியில் மனிஷா ராமதாஸ் மற்றும் பிரமோத் பகத் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். 15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உள்ளது.