Also Watch
Read this
சிவகங்கையில் அரங்கேறிய சுள்ளான் மதன் கொ* சம்பவமும், அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியான பழிவாங்கும் ரீல்ஸ் அலப்பறைகளும் தென் மாவட்டங்களை அதிரவைத்துள்ளது.
வெறும் 400 ரூபாய் கூலிக்கு விலைபோய் இன்ஸ்டா ரவுடிகளாக மாறிய இளைஞர்களை பலிகடாக்களாக மாற்றிவிட்டு, திரைக்கு பின்னால் பதுங்கி நின்று இயக்கிய மாஸ்டர் மைண்ட்களின் முகத்திரை கிழித்தெறியப்பட்டு உள்ளது.

சமூக வலை தளங்களில் வெடித்த...
தமிழகம் எத்தனையோ குற்றச் சம்பவங்களை சந்தித்திருந்தாலும், கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவிலும், தென் மாவட்டங்களின் சந்துபொந்துகளிலும் தீயாய் பரவிக்கொண்டிருக்கும் ஒரு ஹாட் டாபிக் தான், சிவகங்கை மாவட்டத்தில் பட்டப்பகலில் சினிமா பாணியில் அரங்கேறிய சுள்ளான் மதன் கொ* சம்பவமும், அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெடித்த ரீல்ஸ் அலப்பறைகளும் தான்.

படு குழியில்...
’எப்பவுமே எங்கள் ஏரியாவில் நாங்க தான் கெத்து, எங்களை மீறி இங்க எதுவும் நடக்காது,’ என்று மார் தட்டிக்கொண்டு, இன்ஸ்டாகிராம் பக்கங்களை ரவுடி விளம்பர பலகைகளாக மாற்றி வரும் இந்த சுள்ளான் மதன் கும்பலை சேர்ந்தவர்கள், லைக்ஸ் வேண்டும், ஃபாலோயர் அதிகரிக்க வேண்டும், ஊரே தங்கள் பெயரை சொல்லி சிலிர்க்க வேண்டும் என்ற ஆபத்தான ஆசையில் இன்றைய இளைய தலைமுறையினர் படுகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பயங்கரமான ஆயுதங்களை கையில் ஏந்தி மிரட்டல் விடுவது, சினிமா பஞ்ச் டயலாக்குகளுக்கு ஏற்ப காதை கிழிக்கும் BGMகளை பொருத்துவது போன்றவற்றை தங்கள் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக பெருமையடித்து திரிகிறார்கள்.

காவல்துறை எச்சரிக்கை
சுள்ளான் மதன் கொ*யை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் முழுக்க சுள்ளான் கொ*க்கு பழி தீர்ப்போம், ரத்தம் சிந்துவோம் என்ற கொடூரமான கோணத்தில் ஏராளமான ரீல்ஸ்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. சமூகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் இந்த வெறிச்செயலை கவனித்த காக்கி துறை, உடனே அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்ததுடன், ’எவன் எவன் வன்முறையை தூண்டி ரீல்ஸ் போட்டானோ, அத்தனை பேரையும் உள்ளே தள்ளுவோம்’ என்று கறாராக எச்சரித்துள்ளது.
இதையடுத்து, நெஞ்சை பதற வைக்கும் சில திடுக்கிடும் உண்மைகளை போட்டுடைத்துள்ளது ஒரு இளைஞனின் வீடியோ வாக்குமூலம்.

ரூ.400 கூலிக்கு...
அதாவது, வன்முறை ரீல்ஸ்களை தயாரித்து தங்களது பக்கங்களில் பதிவிட சுள்ளான் மதன் தரப்பு ஆட்களை விலைபேசி பயன்படுத்தி உள்ளதுடன், ஒரு ரீல்ஸ் வீடியோவுக்கு 400 ரூபாய் கொடுத்து இவற்றை வெளியிட சொல்லியிருக்கிறார்கள்.
இதில், கொடுமையின் உச்சம் என்னவென்றால், ரீல்ஸில் எந்த வசனத்தை பேச வேண்டும், பின்னணியில் எந்த பாடல் ஒலிக்க வேண்டும், எப்படி எடிட் செய்ய வேண்டும் என்பது வரை அத்தனை பிளான்களையும் சுள்ளான் மதன் தரப்பே கையில் கொடுத்திருக்கிறது.
சிவகங்கையில் காக்கி துறையின் கண்காணிப்பு சூடுபிடித்ததும், போலீசிடம் சிக்காமல் தப்பிக்க மற்ற மாவட்டங்களை சேர்ந்த சில இன்ப்ளூயன்சர்களை வைத்து காய் நகர்த்தியுள்ளனர் இந்த மாஸ்டர் மைண்ட்கள்.

போலீஸ் வளைக்கும் போது...
மஞ்சுவிரட்டு சம்பந்தமான வீடியோக்களை போட்டு வந்தவர்கள்தான், இந்த வன்முறை ரீல்ஸ்களை பரப்ப கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சில்லறை பணத்திற்காக இளைஞர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை இன்ஸ்டா ரவுடிகளாக மாற்றி வேடிக்கை பார்க்கும் கயவர்கள், போலீஸ் இரும்புக்கரம் பாயும்போது அவர்கள் பலிகடாக்களாக மாற்றப்பட்டு திகைத்துபோய் நிற்கின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஒரு சில நொடிகளில் வந்துபோகும் இந்த ரீல்ஸ்கள், நிஜ வாழ்க்கையில் எத்தகைய கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்தாலே நெஞ்சம் பதைபதைக்கிறது.
லைக்ஸ், வியூஸ் என தொடங்கப்படும் ரீல்ஸ் வன்முறைகள், சில நாட்களில் 2 சமூகங்களுக்கு இடையேயான சாதிவெறி மோதல்களாகவும், பழிக்கு பழிவாங்கும் கொ*களாகவும் பரிணாமம் எடுக்கின்றன.

தவறான விபரீத முன்மாதிரி
இதை பார்க்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களோ, ’கத்தி தூக்கினா இன்ஸ்டாவில் பாப்புலர் ஆகலாம், பெரிய ஆளாகலாம்’ என்ற தவறான விபரீத முன்மாதிரியை தங்களுக்குள் ஆழமாக பதித்து கொண்டு, ஒட்டுமொத்த தலைமுறையையும் வன்முறை பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.
சாதி, மதம் மற்றும் பெருமைகளின் பெயரால் வன்முறைகளை சுமந்து, ஏற்கெனவே பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ள தென் மாவட்டங்களுக்கு இந்த இன்ஸ்டா ரீல்ஸ் கலாச்சாரம் மற்றொரு தலைவலியாக மாறியிருக்கிறது.
’எந்த தெருவில் எப்போது மோதல் வெடிக்குமோ, எந்த கத்தி யாருடைய கழுத்தை அறுக்குமோ?’ என்ற பயத்தில் சாதாரண கூலி பொதுமக்கள் உறைந்து போயிருக்கிறார்கள்.

அமைதியை நிலை நாட்ட...
சில்லறை காசுக்கு ஆசைப்பட்டு இன்ஸ்டாவில் ரவுடிகளுக்கு கொடிபிடித்த இந்த இளைஞர்கள், காக்கிச் சட்டையின் இரும்புக்கரம் பாயும்போது ’அவங்கதான் காசு கொடுத்தாங்க, அதனால்தான் அப்படி செய்தேன்,’ என கேமரா முன்னாடி நின்னு கதறி துடிக்கிற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் ரவுடியிசத்தின் வேர்களை அடியோடு பிடுங்கி எறிந்துவிட்டு, திரைக்கு பின்னால் இருந்து காய் நகர்த்தும் கயவர்களை கூண்டோடு வளைத்து பிடித்தால் மட்டுமே தென் மாவட்டங்களில் அமைதியை நிலை நிறுத்த முடியும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved