நெல்லை மாவட்டத்தில், ஒரே நாளில் ஒன்றே கால் கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களில் கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கஞ்சா கடத்தல் மன்னன் தற்கொலை செய்து கொண்டார். பெரிய மனுஷன் வேடத்தில் வலம் வந்த கஞ்சா கடத்தல் மன்னனின் கூட்டாளிகள் சிக்கியது எப்படி? ஏன் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட கஞ்சா கடத்தல் மன்னன் தாழையூத்து கலைஞர் பாண்டியன். ஒடிசா, பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி வழியாக நெல்லைக்கு பெருமளவில் கஞ்சா கடத்தி வந்த கலைஞர் பாண்டியனின் கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்ட போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கலைஞர் பாண்டியன் மற்றும் அவருடன் தொடர்புடைய கூட்டாளிகளின் செல்போன் செயல்பாடுகள் மற்றும் உரையாடல்களை ரகசியமாக கண்காணித்தபோது, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ், ஆய்வாளர் சாவித்திரி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், கடந்த சனிக்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற மினி லாரி மற்றும் கேரள பதிவெண் கொண்ட காரை சினிமா பாணியில் துரத்திச் சென்றனர். நெல்லை - மதுரை நான்கு வழிச்சாலையில், பாளையங்கோட்டை பொட்டல் விலக்கு பகுதியில் மினி லாரியை மடக்கி பிடித்த போலீசார், 40 பொட்டலங்களில் இருந்த 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், மினி லாரியை ஓட்டி வந்ததாக கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த 26 வயதான நிதீஷ்குமார் என்பவனை கைது செய்தனர். இந்நிலையில், போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கார், தச்சநல்லூர் பகுதியில் மறைவான இடத்தில் கேட்பாரற்று நின்ற நிலையில் கைப்பற்றிய போலீசார், கேரள போலி பதிவெண் கொண்ட காரில் இருந்து 70 பொட்டலங்களில் பதுக்கி வைத்திருந்த 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மினி லாரி மற்றும் காரில் இருந்து கைப்பற்றப்பட்ட 220 கிலோ கஞ்சாவின் மொத்த மதிப்பு சுமார் ஒன்றே கால் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதற்கிடையே, பிடிபட்ட நிதீஷ்குமாரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தாழையூத்து ராம் நகரை சேர்ந்த 23 வயதான சுரேஷ்குமார் என்பவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த இருவரிடமும் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது, சுரேஷ்குமாரின் தந்தையான கலைஞர் பாண்டியன் என்பது தெரியவந்தது. மேலும், கலைஞர் பாண்டியனின் சகோதரரான கருப்பசாமி என்பவரின் வங்கி கணக்கு மூலம், ஒடிசாவை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளுக்கு 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்து கஞ்சா கொள்முதல் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தலில் தொடர்புடைய கருப்பசாமி, கார் ஓட்டுநர் அஜித், மதன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், தமது மகன் சுரேஷ்குமார் மற்றும் கூட்டாளி கைதானதை அறிந்த கலைஞர் பாண்டியன், தம்மை எப்படியும் போலீசார் கைது செய்து விடுவார்கள் என பயந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தாழையூத்து கங்கைகொண்டான் பகுதியில் செல்வாக்குமிக்க மனிதராக வலம்வந்த கலைஞர் பாண்டியன், ஆரம்பத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக, அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆந்திரா, பீகார், ஒடிஷாவுக்கு அரிசியை கடத்திச் செல்லும் அவரது ஆட்கள் மூலம், திரும்பி வரும்போது அதே லாரிகளில் உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்து தென் மாவட்டங்களில் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. தென் மாவட்டங்களில் பெரிய அளவில் கஞ்சா சப்ளை செய்த கும்பலை சுற்றி வளைத்துள்ள போலீசார், இதன் பின்னணியில் உள்ள நெட் ஒர்க் குறித்து தீவிர புலன் விசாரணையில் இறங்கியுள்ளனர்.