Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் கள்ளிகுளம் அடுத்துள்ள சௌந்தரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதியான சிலுவைதாசன் (85) - புஷ்பம் (80) தம்பதியினர் கடந்த 7-ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், முன்பக்கக் கதவை கம்பி மற்றும் கட்டையால் நெம்பி உள்ளே சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 18 பவுன் தங்க நகைகள் மற்றும் சட்டைப் பையிலிருந்த 2000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். பீரோ திறக்கப்படும் சத்தம் கேட்டு விழித்த சிலுவைதாசன் "திருடன் திருடன்" எனச் சத்தமிடவே, கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்துச் சிலுவைதாசன் அளித்த புகாரின் பேரில் ராதாபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் பரமேஸ்வரபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், செட்டிகுளம் மாரிமுத்து மற்றும் களக்காடு சுப்ரமணியபுரம் சுரேஷ் ஆகிய மூன்று பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் மூவரும் சேர்ந்து சிலுவைதாசனின் வீட்டில் 18 பவுன் நகைகளைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இவற்றின் மதிப்பு 7,50,000 என தெரிகிறது.இதையடுத்து குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved